பிறந்து 5 நாளான குட்டியானை சாவு

கோவை அருகே வனப்பகுதியில் பிறந்து 5 நாளே ஆன குட்டியானை பரிதாபமாக உயிரிழந்தது. அதன் உடலை எடுக்க விடாமல் தாய் யானை பாசப்போராட்டம் நடத்தியது.

Update: 2022-07-22 16:16 GMT

பேரூர்

கோவை அருகே வனப்பகுதியில் பிறந்து 5 நாளே ஆன குட்டியானை பரிதாபமாக உயிரிழந்தது. அதன் உடலை எடுக்க விடாமல் தாய் யானை பாசப்போராட்டம் நடத்தியது.

பிளிறும் சத்தம்

கோவை கோட்ட வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இந்த வனப்பகுதி, கேரள மாநிலத்தில் இருந்து இடம்பெயர்ந்து செல்லும் காட்டு யானைகளுக்கு வலசைபாதையாக (வழிப்பாதை) உள்ளது. எனவே இங்கு காட்டு யானைகளின் நடமாட்டத்தை வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இந்த நிலையில், கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே அட்டுக்கல் மலைவாழ் கிராமத்தையொட்டிவனப்பகுதியில் காட்டு யானைகள் பிளிறும் சத்தம் கேட்டது. இது குறித்து அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

குட்டியானை உடல்

இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் கோவை வனச்சரக அதிகாரி அருண்குமார் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அட்டுக்கல் கிராமத்தையொட்டி வனப்பகுதி எல்லையில் இருந்து 50 மீட்டர் தூரத்தில் 10-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளின் கூட்டம் நின்று கொண்டு இருந்தன.

உடனே வனத்துறையினர் அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு ஒரு குட்டி யானை உயிரிழந்து கிடந்தது. அதன் அருகே நின்ற தாய் யானை தனது துதிக்கையால் குட்டியானையை வருடியபடி நின்று கொண்டு இருந்தது. உடனே வனத்துறையினர் அந்த குட்டி யானையின் உடலை மீட்க முயன்றனர்.

அப்போதும் அந்த இடத்தை விட்டு விலகாமல் தாய் யானை நின்று கொண்டு இருந்தது. இதற்கிடையே இருள் சூழ்ந்துவிட்டதால், குட்டியானையின் உடலை மீட்க முடியவில்லை.

பிரேத பரிசோதனை

இந்த நிலையில் நேற்று காலையில் வனத்துறையினர் கால்நடை டாக்டர் குழுவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போதும் அங்கு தாய் யானை மற்றும் காட்டு யானைகள் அங்கு நின்றன.

உடனே வனத்துறையினர் பட்டாசுகளை வெடித்து யானைகளை அங்கிருந்து விரட்டினார்கள். பின்னர் குட்டி யானையின் உடலை மீட்க வனத்துறையினர் சென்றனர்.

அப்போது சற்றுதூரத்தில் நின்ற தாய் யானை வேகமாக ஓடி வந்து வனத்துறையினரை விரட்டியது. மேலும் குட்டியானையின் உடல் அருகே யாரையும் நெங்க விடாமல் பாசப் போராட்டம் நடத்தியது.

இதையடுத்து வனத்துறையினர் பட்டாசு வெடித்து தாய் யானையை வனப்பகுதிக்குள் துரத்தினார்கள். பின்னர் குட்டி யானையின் உடல் மீட்கப்பட்டு அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு அங்கேயே குழி தோண்டி குட்டியானையின் உடல் புதைக்கப்பட்டது.

இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, உயிரிழந்தது பிறந்து 5 நாட்களே ஆன ஆண் குட்டி யானை ஆகும். அது, உடல்நிலை குறைவு காரணமாக உயிரிழந்து இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதன் உடற்கூறுகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது என்றனர்.

மேலும் செய்திகள்