மதுரவாயலில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி
மதுரவாயலில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்தான். இதனை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
மதுரவாயல்,
சென்னை மதுரவாயல், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 29). இவருடைய மனைவி சோனியா (25). இவர்களுடைய 4 வயது மகன் ரக்சன்.
கடந்த சில நாட்களாக ரக்சன், காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதற்காக அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் ரக்சனை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் கடந்த 6-ந் தேதி சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்ததில் ரக்சனுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
ஆனாலும் சிகிச்சை பலனின்றி ரக்சன் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
சாலை மறியலில் ஈடுபட முயற்சி
இந்த நிலையில் டாக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே தங்கள் மகன் ரக்சன் உயிரிழந்ததாக அவனது பெற்றோர் குற்றம் சாட்டினர். இதனால் சிறுவனின் உடலுடன் நேற்று மதுரவாயலில் பூந்தமல்லி நெடுசாலையில் மறியல் செய்வதற்காக சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மதுரவாயல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியல் செய்ய வந்தவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போக செய்தனர். ேமலும் போராட்டம் மற்றும் அசம்பாவிதங்களை தவிர்க்க அங்கு போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக சிறுவன் ரக்சனின் பெற்றோர் கூறியதாவது:-
அலட்சியம்
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதியில் குடிநீர் வசதி கிடையாது. லாரிகள் மூலம்தான் குடிநீர் வினியோகம் செய்கின்றனர். அதனால் குடிநீரை பிடித்து பல நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்தும் நிலை உள்ளது.
இந்த பகுதியில் கழிவுநீரும் தேங்கியுள்ளது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் மற்றும் தொற்று நோய் உள்ளிட்டவைகளால் இந்த பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
எங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரவேண்டும், தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றவேண்டும் என பலமுறை புகார் கொடுத்தும் மாநகராட்சி அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்துவிட்டனர். டாக்டர்கள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் அலட்சியமே எங்கள் மகன் உயிரிழப்புக்கு காரணம்.
இவ்வாறு அவர்கள் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
சிறுவன் உயிரிழந்ததை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு சென்ற வளசரவாக்கம் மண்டல அதிகாரிகள், அந்த பகுதி முழுவதும் சுத்தம் செய்து பிளீச்சிங் பவுடர் தெளித்தனர். டெங்கு காய்ச்சலுக்கு சிறுவன் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.