புலிக்குட்டிகள் நடமாடுவதாக 4 மணி நேரம் தேடுதல் வேட்டை
திமிரி அருகே பாறை மறைவில் நள்ளிரவில் புலிக்குட்டிகள் நடமாட்டம் இருப்பதாக போதை ஆசாமி கொடுத்த தகவலால் போலீசார், வனத்துறையினர் 4 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது நாய்க்குட்டிகள் நடமாடியது தெரிய வந்தது.
புலிக்குட்டிகள் நடமாட்டம்
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரியை அடுத்த கே.கே.தோப்பு பகுதியில் ராணிப்பேட்டை- திருவண்ணாமலை மாவட்ட எல்லையை ஒட்டி மலைப்பகுதி உள்ளது. இந்த மலையில் உள்ள பெரிய பாறை அருகே 2 புலி குட்டிகள் இருப்பதாக நேற்று முன்தினம் திமிரி போலீசாருக்கு செல்போனில் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தேவராஜ் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனை அடுத்து வனத்துறையினரும், போலீசாரும் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இரவு ஆகிவிட்ட போதிலும் டார்ச் லைட் வெளிச்சத்தில் தேடும் பணியை தொடர்ந்தனர். நள்ளிரவு வரை சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக தேடுதல் பணி தொடர்ந்தது. இந்த நிலையில் செல்போனில் தகவல் தெரிவித்த அந்த நபரை தொடர்பு கொண்டபோது கே.கே.தோப்பு மலையில் உள்ள பெரிய பாறையில் புலிக்குட்டி இருப்பதாக கூறியுள்ளார்.
நாய் குட்டிகள்
அதன்படி அங்கு சென்று பார்த்தபோது பெரிய பாறையின் பின்புறம் நாய்க்குட்டிகள் விளையாடிக் கொண்டிருந்தன. பின்னர் செல்போனில் தகவல் அளித்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் மது போதையில் இருந்ததும், போதையில் நாய்க்குட்டிகள் விளையாடியதை பார்த்து புலிக்குட்டிகள் என போலீசாருக்கு தகவல் தெரிவித்ததும் தெரியவந்தது. இதை அடுத்து அந்த நபரை போலீசார் எச்சரித்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.