தஞ்சையில் காணாமல் போன 300 ஆண்டு பழமையான தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு
தஞ்சை அருங்காட்சியகத்தில் காணாமல் போன 300 ஆண்டுகள் பழமையான முதல் தமிழ் பைபிள் லண்டனில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு போலீசார் கண்டுபிடித்து உள்ளனர்.
சென்னை,
பார்த்தோலோமஸ் சீகன் பால்க் என்ற கிறிஸ்தவ மதபோதகர், 1706-ம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து இந்தியா வந்தார். அவர் தற்போதைய நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள, அப்போதைய தரங்கம்பாடியில் மதபோதகராக பணியாற்றினார். அவர் ஒரு அச்சகத்தை நிறுவி, அதில் தமிழ்மொழியில் இந்திய நாட்டு கலாசாரம் மற்றும் மதம் சம்பந்தமான படைப்புகளை வெளியிட்டார்.
இவர் பைபிளின் புதிய ஏற்பாட்டை, 1715-ம் ஆண்டில் தமிழில் மொழி பெயர்த்தார். 1719-ம் ஆண்டு இவர் காலமாகி விட்டார்.
இவர் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்ட முதல் பைபிள், தஞ்சை சரபோஜி மன்னருக்கு பரிசாக வழங்கப்பட்டது. அந்த அரிய தமிழ் பைபிளை, தமிழக அரசு பிற்காலத்தில் தஞ்சை சரஸ்வதி மகால் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைத்தது.
விலை மதிக்க முடியாத இந்த பைபிள், கடந்த 10.10.2005 அன்று காணாமல் போய் விட்டது.
போலீஸ் விசாரணை
இது தொடர்பாக தஞ்சை அருங்காட்சியகத்தின் நிர்வாக அதிகாரி தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், காணாமல் போன தமிழ் பைபிளை கண்டுபிடிக்க முடியவில்லை என்று அறிவித்து வழக்கை முடித்து விட்டனர்.
காணாமல் போன முதல் தமிழ் பைபிள் 300 ஆண்டுகள் பழமையானது. அதை கண்டிப்பாக கண்டுபிடிக்க வேண்டும், என்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஜெயந்த்முரளி உத்தரவிட்டார். ஐ.ஜி.தினகரன் மேற்பார்வையில், சூப்பிரண்டு ரவி தலைமையில் இதற்காக தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடந்தது.
துப்பு கொடுத்த பார்வையாளர் பதிவேடு
தனிப்படை போலீசார், தஞ்சை அருங்காட்சியகத்தின் பார்வையாளர் பதிவேட்டை ஆய்வு செய்தனர். பைபிள் காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்ட கால கட்டத்தில் அதாவது 7.10.2005 அன்று தஞ்சை அருங்காட்சியகத்திற்கு வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் வந்து சென்றது, பதிவேட்டில் பதிவாகி இருந்தது.
அவர்கள் மூலம்தான் முதல் தமிழ் பைபிள் காணாமல் போய் இருக்க வேண்டும், என்று முடிவு செய்து, வெளிநாட்டு அருங்காட்சியகங்களின் வலைதளங்களை போலீசார் ஆய்வு செய்து பார்த்தனர். அப்போது இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில் உள்ள கிங்ஸ்கலெக்ஷன் என்ற நிறுவனத்தின் ஆன்லைன் வலைதளத்தில், காணாமல்போன தமிழ் பைபிள் காணப்பட்டது. அதில் சரபோஜி மன்னரின் கையெழுத்து உள்ளது.
கண்டுபிடிக்கப்பட்ட முதல் தமிழ் பைபிளை, தமிழகம் கொண்டுவர யுனெஸ்கோ அமைப்பின் மூலம் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அதை திருடிச்சென்றவர்களை கண்டுபிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர். சிலை கடத்தல் தடுப்பு போலீசாரின் இந்த சாதனை குறித்து, டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு தெரிவித்துள்ளார்.