மேலப்பாளையம் அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்-கலெக்டரிடம், 3 வயது சிறுமி மனு

நெல்லை மேலப்பாளையம் அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் 3 வயது சிறுமி மனு வழங்கினார்.

Update: 2023-02-13 21:21 GMT

நெல்லை மேலப்பாளையம் அங்கன்வாடி மையத்தில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் 3 வயது சிறுமி மனு வழங்கினார்.

குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

நெல்லை மேலப்பாளையம் ஞானியாரப்பா சின்ன தெருவை சேர்ந்த ரசூல் காதர்மைதீன் மகள் சபா ஹாதியா (வயது 3). இவள் தனது தந்தையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து மனு வழங்கினார்.

அந்த மனுவில், ''மேலப்பாளையம் அம்பிகாபுரத்தில் ஒரு அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 10 மாதங்களாக நான் படித்து வருகிறேன். எங்கள் அங்கன்வாடி மையமானது, ஆதி திராவிடர் அரசு உதவிபெறும் பள்ளியின் வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம், சத்துணவு, சத்துமாவு உள்ளிட்ட பல்வேறு உதவிகள் அங்கன்வாடி மையத்தில் வழங்கப்பட்டாலும், அங்கன்வாடி மைய கட்டிடம் பழமையானதாக உள்ளது. இங்கு 20-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகிறோம்.

எனவே எங்களுக்கு தனியாக அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டித்தர வேண்டும். மேலும் குடிநீர், கழிப்பிட வசதி, விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் நிறைவேற்றி தர வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அந்த மனுவில் சிறுமியின் கைரேகை இடம் பெற்றிருந்தது.

சுடுகாடு நடைபாதை

மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்பபாண்டியன் வழங்கிய மனுவில், ''பாளையங்கோட்டை யூனியனுக்குட்பட்ட வேப்பன்குளம் கிராமத்தில் பட்டியலினத்தவர்கள் ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு 2 சமுதாயத்துக்கு பாத்தியப்பட்ட 2 சுடுகாடுகள் அருகருகே அமைந்துள்ளது. ஒரு சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சுடுகாடு நடைபாதையை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதன் காரணமாக மற்றொரு தரப்புக்கு சொந்தமான சுடுகாடு நடைபாதை வழியே செல்ல வேண்டி உள்ளது. இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே சுடுகாடு நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அந்த இடத்தை மீட்டு தர வேண்டும்'' என கூறப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

துணை மின் நிலையம் அமைக்க எதிர்ப்பு

நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோநகர் மக்கள் வண்ணை முருகன் தலைமையில் கலெக்டர் வந்து தங்கள் பகுதியில் விவசாய நிலத்தில் துணை மின் நிலையம் அமைக்க கூடாது. அப்படி அமைத்தால் விவசாயம் பாதிக்கப்படும் என்று கூறி மனு கொடுத்தனர்.

சீதபற்பநல்லூர் பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் பள்ளிக்கூடத்திற்கு ஒதுக்கிய இடத்தில் பள்ளிக்கூடம் கட்டித்தர வேண்டும் என்று அந்த ஊர் மக்கள் மனு கொடுத்தனர்.

தமிழ் தேசிய கட்சியினர் ஆரோன் செல்லத்துரை தலைமையில் கொடுத்த மனுவில், ''நாங்குநேரி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஏராளமான முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இது தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என கூறப்பட்டிருந்தது.

ஆட்டோ டிரைவர்கள்

நேதாஜி சுபாஷ் சேனை ஒருங்கிணைப்பாளர் மகராஜன் தலைமையில், நெல்லை சந்திப்பு ரெயில் நிலைய ஆட்டோ டிரைவர்கள் வழங்கிய மனுவில், நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு அரசு பஸ்கள் வந்து பயணிகளை ஏற்றி செல்வதால் ஆட்டோ டிரைவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். எனவே அங்கு அரசு பஸ் வருவதை நிறுத்த வேண்டும், என்று தெரிவித்து இருந்தனர்.

கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தங்களது சொந்த இடப்பிரச்சினை காரணமாக மனு கொடுக்க வந்தனர். போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்களில் ஒருவர் எப்படி எங்களை சோதனை செய்யலாம் என்று கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்