அயோத்தியாப்பட்டணம்:-
அயோத்தியாப்பட்டணம் அருகே குட்டையில் மூழ்கி 3 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
3 வயது குழந்தை
அயோத்தியாப்பட்டணம் அருகே பெரியகவுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் துர்கா. இவருடைய கணவர் சரவணன். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு கனிஷ் (3) என்ற சிறுவன் உள்ளான். குடும்ப பிரச்சினையால் துர்கா கடந்த 10 மாதங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைகொண்டார்.
அதன்பிறகு கனிஷ், துர்காவின் தாய் மோகனம்பாள் பராமரிப்பில் இருந்து வந்தான். இதற்கிடையே பெரியகவுண்டாபுரம் அருகே உள்ள தோட்டத்தில் கனிஷ் விளையாடிக் கொண்டிருந்தான்.
குட்டையில் மூழ்கி சாவு
அப்போது, தோட்டம் அருகே 4 அடியில் உள்ள பண்ணை குட்டையில் கனிஷ் தவறி விழுந்தான். குழந்தையின் அலறல் சத்தம் கேட்ட துர்காவின் தாய் மோகனாம்பாள் பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்தார்.
குழந்தையை மீட்டு மின்னாம்பள்ளி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு கனிஷ் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் தொடர்பாக காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணைநடத்தினர்.