காய்கறி வாங்க சென்ற மூதாட்டியிடம் 2½ பவுன் சங்கிலி திருட்டு

காய்கறி வாங்க சென்ற மூதாட்டியிடம் போலீஸ்காரர்கள் என கூறி மர்ம ஆசாமிகள் 2½ பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றனர்.

Update: 2023-08-16 19:21 GMT

காய்கறி வாங்க சென்ற மூதாட்டி

திருச்சி சுப்பிரமணியபுரம் ரஞ்சிதபுரம் அருகே ராஜா தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள். இவர் ரெயில்வேயில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி புவனேஸ்வரி (வயது 65). இவர் நேற்று காலை 10.30 மணியளவில் வீட்டில் இருந்து அருகே உள்ள கடைக்கு காய்கறி வாங்க சென்றார். அங்குள்ள கென்னடிதெரு வளைவில் நின்ற ஒரு நபர் புவனேஸ்வரியிடம் தானும், அங்கு நிற்கும் மற்றொரு நபரும் போலீஸ் என்றும், ஏன் நகையை கழுத்தில் போட்டு கொண்டு திரிகிறீர்கள்.

இங்கு சமீபத்தில் கூட ஒரு பெண்ணிடம் 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி நகையை பறித்துள்ளார்கள். இதனால் தான் போலீஸ் உயர்அதிகாரிகள் எங்களை மப்டியில் இந்த பகுதியை கண்காணிக்க அனுப்பி இருக்கிறார்கள். எனவே அந்த போலீஸ்காரரை பார்த்துவிட்டு செல்லுங்கள் என அழைத்து சென்றுள்ளார். அங்கிருந்த மற்றொரு நபர் கழுத்தில் உள்ள சங்கிலியை கழட்டி இந்த மணிபர்சில் போடுங்கள் என்று கூறி உள்ளார்.

2½ பவுன் நூதன திருட்டு

புவனேஸ்வரியும் 2½ பவுன் சங்கிலியை கழட்டி அந்த நபர் கொடுத்த மணி பர்சில் போட்டுள்ளார். பின்னர் மணிபர்சை வாங்கி கொண்டு அவர் வீட்டுக்கு சென்று திறந்து பார்த்தபோது, அதில் நகைக்கு பதிலாக சரளை கற்கள் மட்டுமே இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த புவனேஸ்வரி தனது கணவர் கலியபெருமாளுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து அவர் வீட்டுக்கு வந்து இருவரும் கே.கே.நகர் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் புவனேஸ்வரியிடம் நூதனமாக சங்கிலியை திருடி சென்ற 2 பேரும் முககவசம் அணிந்து இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்