10-ம் வகுப்பு மாணவியை கடத்திய 17 வயது சிறுவன்... இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்

தாயார் கண் விழித்து பார்த்தபோது அருகில் படுத்திருந்த மாணவியை காணவில்லை.

Update: 2024-07-14 21:52 GMT

குமரி,

குமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கடற்கரை பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருடைய 15 வயது மகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கணித பாடத்தில் தோல்வியுற்றார். இதையடுத்து கணித பாடத்தை மட்டும் தனிதேர்வாக எழுதிவிட்டு வீட்டில் இருந்து வந்தார்.

கடந்த 7-ந் தேதி மாணவியின் தந்தையும், அண்ணனும் கடலில் மீன்பிடிக்க சென்றனர். இரவில் மாணவி, தாய் மற்றும் அக்காளுடன் தூங்கினார். மறுநாள் காலையில் தாயார் கண் விழித்து பார்த்தபோது அருகில் படுத்திருந்த மாணவியை காணவில்லை. அத்துடன் பின்பக்க கதவு திறந்து கிடந்தது. மேலும் வீட்டிலிருந்த கணவரின் மோட்டார் சைக்கிளையும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் சத்தம் போட்டார்.

பின்னர் இதுகுறித்து மாணவியின் தாயார் குளச்சல் மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பிரேமா புதிய குற்றவியல் திருத்த சட்டத்தின்படி 96 பி.என்.எஸ். பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் மாணவியின் வீட்டுக்கு வந்த நபர் ஒருவர் அவரை ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றது தெரிய வந்தது. அதாவது, மாணவியின் தந்தையின் மோட்டார் சைக்கிளிலேயே அவரை அந்த நபர் அழைத்துச் சென்றுள்ளார்.

மேலும் மாணவியின் செல்போன் எண்ணை கண்காணித்தபடி போலீசார் இருந்தனர். இதில் செல்போன் சிக்னல் சேலத்தை காட்டியது. அதன்படி போலீசார் அங்கு விரைந்து சென்ற போது ஒரு வீட்டில் மாணவி மற்றும் அவருடன் தங்கியிருந்தவரை மடக்கினர்.

விசாரணையில், மாணவியை கடத்திய நபர் 17 வயது சிறுவன் என்பதும், சேலத்தை சேர்ந்த இவர் 10-ம் வகுப்புவரை படித்துவிட்டு சென்ட்ரிங் வேலை செய்வதும் தெரியவந்தது. மாணவியும், 17 வயது சிறுவனும் கடந்த 2½ மாதங்களாக இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்கிடையே காதலாக மலர்ந்தது.

இந்தநிலையில் சிறுவன் குளச்சலில் மாணவியின் வீட்டுக்கு வந்து அவரது தந்தையின் மோட்டார் சைக்கிளிலேயே மாணவியை சேலத்துக்கு கடத்தி சென்றுள்ளார். பின்னர் சேலத்தில் தலைமறைவாக இருந்த நிலையில் போலீசிடம் சிக்கியுள்ளனர். அத்துடன் மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மீட்கப்பட்ட மாணவி மருத்துவ பரிசோதனைக்கு பின்பு பெற்றோரிடம் ஒப்படைக்கப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.

இன்ஸ்டாகிராம் பழக்கத்தில் சேலத்தில் இருந்து குமரிக்கு சென்று 10-ம் வகுப்பு மாணவியை 17 வயது சிறுவன் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்