காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் -போலீசார் விசாரணை
சேலம் அருகே காதல் விவகாரத்தில் 17 வயது சிறுவனை மரத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்,
சேலம் மாவட்டம், மல்லூர் அருகே உள்ள பாரப்பட்டி கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் பிளஸ்-2 படித்து முடித்துவிட்டு கூலி வேலை செய்து வருகிறான். அந்த சிறுவனும், அவரது உறவுக்கார முறை பெண்ணான 17 வயது சிறுமியும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் இவர்களது காதல் விவகாரம் குறித்து கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. உடனே சிறுமியின் பெற்றோர் சிறுவனை அழைத்து தனது மகளிடம் பழகக்கூடாது என கூறி கண்டித்துள்ளனர். ஆனால் அவர்கள் இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு சென்ற சிறுவன் அங்கு அந்த சிறுமியை சந்தித்து பேசி உள்ளான். இதனை அந்த பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பார்த்துள்ளனர்.
மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்
இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் சிறுவனை பிடித்து அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து கைகளாலும், பிளாஸ்டிக் குழாயாலும் சரமாரியாக தாக்கி உள்ளனர். இதனால் சிறுவன் அலறி துடித்துள்ளான்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுவனின் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த அவர்கள் அந்த பெண்ணின் உறவினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் சிறுவனின் முதுகு மற்றும் இடுப்பு பகுதியிலும் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், அவனை சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேலும் இது குறித்து அவர்கள் மல்லூர் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் சிறுமியின் தந்தை மற்றும் உறவினர்கள் என மொத்தம் 4 பேர் மீது 5 பிரிவுகளில் மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.