15-ம் நூற்றாண்டு நினைவு கற்கள் கண்டெடுப்பு
செஞ்சி அருகே 15-ம் நூற்றாண்டு நினைவு கற்கள் கண்டெடுக்கப்பட்டது.
செஞ்சி:
செஞ்சி அருகே உள்ள அண்ணமங்கலம் கிராமத்தில் ஓய்வுபெற்ற தலையை ஆசிரியர் முனுசாமி அளித்த தகவலின் பேரில் விழுப்புரத்தை சேர்ந்த எழுத்தாளரும், வரலாற்று ஆய்வாளருமான செங்குட்டுவன் ஆய்வு செய்தார். இது குறித்து அவர் கூறியதாவது:-
இப்பகுதியில் ஏற்கனவே பல்லவர் காலத்தை சேர்ந்த கொற்றவை சிற்பம் மற்றும் சோழர் கால கல்வெட்டுகள், சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது நடந்த கள ஆய்வில் 15-16-ம் நூற்றாண்டு 2 நினைவு கற்கள் கண்டறியப்பட்டுள்ளன.
கிராமத்தின் வடக்கில் ஏரிக்கரையின் மீது பலகைக்கல் ஒன்று காணப்படுகிறது. அதில் கைகளில் நீண்ட வாள் மற்றும் கேடயங்களைத் தாங்கிய நிலையில் இரண்டு வீரர்களை காட்டப்பட்டுள்ளனர். இந்த வீரர்களுக்கு அருகில் இரண்டு பெண் உருவங்களும் இடம் பெற்றுள்ளன. இவர்கள் வீரர்களின் மனைவியர் ஆவர்.
ஊரைப் பாதுகாப்பதற்காக நடத்தப்பட்ட போரில் இரண்டு வீரர்கள் உயிர் துறந்துள்ளனர். இவர்களது மனைவியரும் இவர்களுடன் தங்களின் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இவர்களின் நினைவாக சதிக்கல் எனப்படும் இந்த நினைவுக் கல் எடுக்கப்பட்டுள்ளது.
அண்ணமங்கலம் ஏரியின் தென்திசையில் உள்ள பலகைக்கல்லில் மற்றொரு சிற்பம் காணப்படுகிறது. இதில் ஒருவர் தனது ஒரு காலை மடக்கியும், மற்றொரு காலை தொங்க விட்டும் மேடைமீது அமர்ந்துள்ளார். அவருக்கு அருகில் 2 பேர் மெய்க்காவலராக இருக்கிறார்கள். இதில் இருப்பவர் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னராக இருக்கலாம். ஏரி செப்பனிடப்பட்டது தொடர்பாக இவரை நினைவு கூறும் வகையில் இந்நினைவுக் கல் இங்கு எடுக்கப்பட்டு இருக்கலாம்.
இந் 2 கற்களும் செஞ்சியை ஆட்சி செய்த நாயக்கர் காலத்தைச் சேர்ந்தவை ஆகும். இதனை மூத்த கல்வெட்டு ஆய்வாளர் ராஜகோபால் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.