12-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு

திண்டுக்கல் அருகே 12-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2023-06-04 19:00 GMT

திண்டுக்கல்லை அடுத்த தாமரைப்பாடி அருகே பழமையான நடுகல் இருப்பதாக திண்டுக்கல் வரலாற்று ஆய்வுக்குழு ஆய்வாளர் விஸ்வநாததாசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர் தலைமையில் வரலாற்று ஆர்வலர் சந்திரசேகர், வரலாற்று மாணவர் ரத்தின முரளிதர் ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதியில் ஆய்வு செய்தனர். அப்போது 4 அடி உயரம், 6 அடி நீளம் கொண்ட நடுகல் இருப்பதை ஆய்வு குழுவினர் கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

தாமரைப்பாடி அருகே கண்டுபிடிக்கப்பட்ட நடுகல்லில் 2 வீரர்களுடன் ஒரு பெண் இருக்கிறார். அதில் ஒரு வீரனின் கொண்டை இடதுபுறம் மேலே தூக்கியபடி உள்ளது. மேலும் அந்த வீரனின் காதுகளில் வளை குண்டலமும், கழுத்தில் கழுத்தணியும், நெஞ்சில் ஆரமும், இடது தோளிலிருந்து வலது இடுப்பு வரை வீர சங்கிலியும், இடுப்பில் உதர பந்தமும், இடைக் கச்சையும், கைகளில் லாகு வளையமும், மணிக்கட்டில் கைவளையமும், வலது கையால் கதாயுதத்தை கீழே ஊன்றிய படியும், இடது கை தொங்கிய நிலையிலும், வீரனின் காலின் அடியில் பசுமாடு நின்ற நிலையிலும் உள்ளது.

பெண்ணின் கொண்டை தலையின் இடது புறம் மேல் தூக்கியும், காதுகளில் வளை குண்டலமும், கைகளில் வளையமும், கால்களில் தண்டையும், வலது கையில் தீப்பந்தம் தூக்கிய நிலையிலும், இடது கையில் தொங்கிய நிலையில் மதுகுடுவை உள்ளது. இந்த இரு சிற்பங்களும் எதிரிகளிடம் இருந்து வீரன் பசுக்களை மீட்கும்போது உயிரிழந்ததையும், அவருடைய மனைவி உடன்கட்டை ஏறியதையும் குறிக்கிறது. 3-வதாக உள்ள வீரரின் கொண்டை சரிந்தும், காதுகளில் வளைகுண்டலத்துடன் அதிக ஆபரணங்கள் இன்றி உள்ளார். அவர் முதலாவதாக நிற்கும் வீரனின் புதல்வனாக இருப்பார். அவரும் போரில் உயிரிழந்திருக்க வேண்டும். அடுத்ததாக இரு நாகங்கள் இணைந்த நிலையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தில் நாகர் என்னும் மக்கள் வாழ்ந்ததை குறிக்கிறது. இந்த நடுகல் 12-ம் நூற்றாண்டை சேர்ந்தது ஆகும். நடுகல்லின் அமைப்பு, வீரர்களின் தோற்றம் ஆகியவை அதை உறுதி செய்கிறது. இந்த நடுகல்லை இன்றும் மக்கள் வழிபடுகின்றனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்