கொழுமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான சிதிலமடைந்த கரிவரதராஜ பெருமாள் கோவிலை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
கொழுமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான சிதிலமடைந்த கரிவரதராஜ பெருமாள் கோவிலை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
போடிப்பட்டி
கொழுமத்தில் 1000 ஆண்டுகள் பழமையான சிதிலமடைந்த கரிவரதராஜ பெருமாள் கோவிலை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது பக்தர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
பழமையான கோவில்கள்
கோவில்கள் என்பவை வெறும் ஆன்மிக அடையாளங்களாக மட்டுமல்லாமல் ஒவ்வொரு காலகட்டத்திலும் வாழ்ந்த மனிதர்களின் வாழ்வியலை கூறுபவையாகவும் உள்ளன. மேலும் பண்பாடு, கலாசாரம் மட்டுமல்லாமல் கட்டிடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை போன்றவற்றின் அடையாளமாகவும் உள்ளன. அந்தவகையில் மடத்துக்குளம் பகுதியில் ஆன்பொருநை எனப்படும் அமராவதி ஆற்றங்கரையில் ஏராளமான பழமையான கோவில்கள் உள்ளன.
கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோவில், குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவில், கொழுமம் சோழீஸ்வரர் கோவில், கல்யாண வரதராஜ பெருமாள், தாண்டேஸ்வரர் கோவில், கரிவரதராஜப்பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்கள் பழம்பெருமை வாய்ந்தவையாக கம்பீரமாக நிற்கின்றன.
கரிவரதராஜப் பெருமாள் கோவில்
இதில் கொழுமம் பகுதியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவில் போதிய பராமரிப்பில்லாமல் படிப்படியாக பாழாகி வருகிறது. சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் சோழ மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படும். இந்த கோவிலை புதுப்பிக்க வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தநிலையில் கோவிலை புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
கல்வெட்டுகள்
இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது:-
கற்களால் கட்டப்பட்ட கோவிலின் கருவறையைச் சுற்றிலும் அகழி போன்ற அமைப்பு உள்ளது. கருவறை, அர்த்தமண்டபம் தவிர முன் மண்டபம் ஒன்றும் உள்ளது. மேலும் இரு தள விமானம் பராமரிப்பில்லாமல் மரங்கள் முளைத்து படிப்படியாக சிதிலமடைந்து வருகிறது. கோவில் சுவரில் கோவிலுக்கு வழங்கப்பட்ட தானங்கள், வழிபாட்டு முறைகள் உள்ளிட்ட குறிப்புகள் கல்வெட்டுகளாக பதிக்கப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக கோவிலில் வழிபாடுகள் மேற்கொள்ளப்படாமல் பூட்டிய நிலையிலேயே உள்ளது.
இதனால் வவ்வால்கள் குடியிருப்பாக மாறிய கோவிலின் கோபுரம், சுற்றுச்சுவர் உள்ளிட்டவற்றில் மரங்கள் முளைத்து கிடக்கிறது. இதனால் படிப்படியாக பாழாகி வரும் கோவிலை மீண்டும் புதுப்பிக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் கோவிலின் கதவு உடைத்து திறக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவிலை பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் இந்து சமய அறநிலைத்துறை மற்றும் தொல்லியல் துறையினரால் பல கட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவிலை ரூ. 35 லட்சம் செலவில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது பக்தர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
இவ்வாறு பக்தர்கள் கூறினர்.