சென்னையில் பெய்த கனமழையால் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது

சென்னையில் பெய்த கனமழையால் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்தது. கட்டிடத்தில் யாரும் வசிக்காததால் உயிர் சேதம் ஏதும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Update: 2023-05-02 22:39 GMT

சென்னை,

சென்னை பட்டாளம் பகுதியில், பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் உமர் என்பவருக்கு சொந்தமான 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இருந்து வந்துள்ளது. இதில் கடைகள் மற்றும் குடியிருப்பு வீடுகள் வாடகைக்கு விடப்பட்டு வந்துள்ளன.

கட்டிடம் மிகவும் சிதலமடைந்து காணப்பட்டதால், இந்த கட்டிடமானது மனிதர்கள் வாழ தகுதி இல்லாத இடம் என கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கட்டிடத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அதைத் தொடர்ந்து கட்டிடத்தில் குடியிருந்தவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களுக்கு முன்பு கடைசியாக அங்கு இருந்த ஒரு மருந்து கடையும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மழையால் இடிந்து விழுந்தது

இந்த நிலையில், சென்னையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பெய்த பலத்த மழை காரணமாக இந்த 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் நேற்று காலை இடிந்து விழுந்துள்ளது. நல்ல வேளையாக ஏற்கனவே அங்கு குடியிருந்தவர்கள் மற்றும் கடைகள் மாற்றப்பட்டதால், அங்கு ஆட்கள் யாரும் இல்லை. இதனால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.

உடனடியாக தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கட்டிடத்தின் இடிபாடுகளுக்கு அருகில் யாரும் சென்றுவிடாமல் பார்த்துக்கொண்டனர். அதைத்தொடர்ந்து கட்டித்தை முழுமையாக இடிக்கும் பணிகள் நடைபெற்றது. எனினும், கட்டிடம் இடிந்து விழுந்ததால், அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், பரபரப்பாகவும் காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்