தடுப்பூசி போட்ட 10 மாத குழந்தை பலி

தடுப்பூசி போட்ட 10 மாத குழந்தை பலி

Update: 2023-07-19 20:37 GMT

தஞ்சை அருகே தடுப்பூசி போட்ட 10 மாத பெண் குழந்தை இறந்தது. அந்த குழந்தையின் உடலை உறவினர்கள் வாங்க மறுத்து ஆஸ்பத்திரி முன்பு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கட்டிட தொழிலாளி

தஞ்சை அருகே உள்ள மடிகை கீழத்தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27). கட்டிடங்களுக்கு கம்பி கட்டும்(சென்ட்ரிங்) தொழிலாளியான இவருடைய மனைவி கீதா. இந்த தம்பதிக்கு தரணிகா என்ற 10 மாத பெண் குழந்தை இருந்தது. நேற்று மதியம் குழந்தைக்கு 10-வது மாத தடுப்பூசி போட வேண்டும் என்று மடிகையை அடுத்த துறையூர் அங்கன்வாடி மையத்தில் இருந்து பெற்றோருக்கு அழைப்பு வந்துள்ளது.

இதையடுத்து கீதா குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கன்வாடி மையத்திற்கு சென்று குழந்தைக்கு தடுப்பூசி போட்டுள்ளார். தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில் குழந்தைக்கு உடலில் குளிர்ச்சி ஏற்பட்டதோடு கண் அசைவின்றி இருந்துள்ளது. உடனடியாக குழந்தையை காசவளநாடு புதூர் கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

குழந்தை சாவு

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைக்கு நான்கு ஊசிகளை போட்டுள்ளனர். இதனால் குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமானது. பின்னர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் டாக்டர் ஒருவரின் காரிலேயே குழந்தையையும் பெற்றோரையும் அழைத்துக்கொண்டு தஞ்சையில் உள்ள ராசமிராசுதார் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்துள்ளனர்.

அங்கு குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள், குழந்தைக்கு மேலும் நான்கு ஊசிகள் போட்டு உள்ளனர். பின்னர் சிறிது நேரத்தில் குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆஸ்பத்திரியில் குவிந்த உறவினர்கள்

இது குறித்து தகவலறிந்த சதீஷ்குமார், கீதா மற்றும் அவர்களின் உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு குவிந்தனர். மேலும் டாக்டர்களின் அலட்சியத்தால் தான் குழந்தை இறந்து விட்டது.

உரிய விசாரணை நடத்த வேண்டும். அதுவரை குழந்தையின் உடலை வாங்கமாட்டோம் என கோஷமிட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

போலீசார் விசாரணை

இதையடுத்து சம்பவ இடத்திற்கு தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் மற்றும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகார் அளிக்குமாறும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.

இதையடுத்து சதீஷ்குமார் தஞ்சை நகர மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்