எலி மருந்து தின்ற தாயிடம் பால் குடித்த 10 மாத குழந்தை பலி

திருச்சியில் குடும்ப தகராறில் தற்கொலை செய்வதற்காக எலி மருந்து தின்ற தாயிடம் பால் குடித்த 10 மாத குழந்தை பலியானது.

Update: 2022-08-26 19:14 GMT

பொன்மலைப்பட்டி, ஆக.27-

திருச்சியில் குடும்ப தகராறில் தற்கொலை செய்வதற்காக எலி மருந்து தின்ற தாயிடம் பால் குடித்த 10 மாத குழந்தை பலியானது.

இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் வங்கி ஊழியர்

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் கே.வி.கே.சாமி தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் தனியார் வங்கியில் இன்சூரன்ஸ் பிரிவில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி குங்குமவள்ளி (வயது 31). இந்த தம்பதிக்கு வர்ஷா ஸ்ரீ (3), சஸ்திகா ஸ்ரீ ஆகிய 2 மகள்கள் உள்ளனர்.

இதில் சஸ்திகா ஸ்ரீ பிறந்து 10 மாதமே ஆகிறது. நேற்று முன்தினம் கார்த்திகேயன் வேலைமுடிந்து வீட்டுக்கு சென்றார். அப்போது, கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அந்த சமயத்தில் இருவருக்கும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

எலி மருந்து

இந்த சம்பவத்திற்கு பிறகு வீட்டில் இருந்து வெளியே சென்ற கார்த்திகேயன் இரவில் மீண்டும் வீட்டுக்கு வந்தார். அப்போது, குங்குமவள்ளி திடீரென்று வாந்தி எடுத்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திகேயன் மனைவி குங்குமவள்ளியிடம் கேட்டபோது, மன உளைச்சலில் எலி மருந்து தின்று விட்டதாக கூறியுள்ளார். மேலும் 2 குழந்தைகளும் மயங்கிய நிலையில் கிடந்தனர். வீட்டில் ஸ்வீட்ஸ் பாக்ஸ் ஒன்று திறந்த நிலையில் கிடந்தது.

குழந்தை சாவு

இதனையடுத்து கார்த்திகேயன் அக்கம் பக்கத்தினர் உதவியோடு மனைவி மற்றும் 2 குழந்தைகளையும் திருச்சியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு 10 மாத குழந்தை சஸ்திகா ஸ்ரீ சிகிச்சை பலன் இன்றி இறந்தது. குங்குமவள்ளி, வர்ஷா ஸ்ரீ ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்த புகாரின் பேரில் அரியமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் குடும்பத்தகராறு காரணமாக தற்கொலை செய்வதற்காக குங்குமவள்ளி ஸ்வீட்சில் எலி மருந்து கலந்து தின்றுள்ளார். மீதமிருந்த ஸ்வீட்சை வீ்ட்டிலேயே போட்டுள்ளார். அதனை எடுத்து வர்ஷா ஸ்ரீ சாப்பிட்டுள்ளாள். இதனால் அவளும் மயங்கி விழுந்தது தெரியவந்தது.

இதனிடையே குழந்தை சஸ்திகா ஸ்ரீ இறப்பு குறித்து உறவினர்கள் டாக்டரிடம் கேட்டபோது, தாயிடம் பால் குடித்ததால் இறந்து உள்ளது என தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக எலி மருந்து தின்ற தாயிடம் பால்குடித்ததால் குழந்தை இறந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்