9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

கந்தம்பாளையம் அருகே தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தாயார் திட்டியதால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-08-31 18:45 GMT

கந்தம்பாளையம்

9-ம் வகுப்பு மாணவி

நாமக்கல் மாவட்டம் கந்தம்பாளையம் அருகே உள்ள கூடச்சேரி கிராமம் மேலப்பட்டியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 41). இவர் கோழிப்பண்ணையில் மேலாளராக வேலை பார்த்து வருகின்றார். இவரது மனைவி தீபா (38). இவர்களுக்கு ஷாலினி (13), தேவஸ்ரீ (9) என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். ஷாலினி வசந்தபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்தநிலையில் பள்ளியில் மாதாந்திர தேர்வு நடைபெற்றது. இதில் ஷாலினி குறைந்த மதிப்பெண் எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஷாலினியை அவரது தாயார் திட்டியுள்ளார். மேலும் மதிப்பெண் அட்டையில் கையெழுத்து போட மறுத்துவிட்டார். பின்னர் தந்தை குணசேகரனிடம் மதிப்பெண் அட்டையில் கையெழுத்து வாங்கிகொண்டு பள்ளிக்கு சென்றிருக்கிறார். மதிப்பெண் குறைந்ததால் தாயார் திட்டியதால் மாணவி ஷாலினி மன வேதனையில் இருந்துள்ளார்.

தற்கொலை

இதையடுத்து நேற்று ஷாலினி பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த இவரது பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் இதுகுறித்து குணசேகரன் நல்லூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.

இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மாணவி ஷாலினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கந்தம்பாளையம் அருகே மாதாந்திர தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் தாயார் திட்டியதால் 9-ம் வகுப்பு மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்