கீழடி அகழாய்வு பற்றிய 982 பக்க அறிக்கை- மத்திய தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல்

கீழடி பற்றிய 982 பக்க ஆய்வறிக்கையை மத்திய தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார்.

Update: 2023-01-31 20:44 GMT


கீழடி பற்றிய 982 பக்க ஆய்வறிக்கையை மத்திய தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் தாக்கல் செய்துள்ளார்.

வாழ்வியல் நகரம்

சிவகங்கை மாவட்டம் கீழடி கிராமத்தில், பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய பானை ஓடுகள் உள்பட பல்வேறு எச்சங்கள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.

எனவே அங்கு அகழ்வாராய்ச்சி நடத்த மத்திய அரசு முடிவு செய்தது. அதற்காக மத்திய தொல்லியல் அதிகாரி அமர்நாத் தலைமையிலான குழுவினர் கடந்த 2014-ம் ஆண்டு அகழ்வாராய்ச்சி பணிகளை அங்கு தொடங்கினர். அப்போது உலகமே ஆச்சரியப்படும் வகையில் கீழடி கிராமத்திற்குள், மக்கள் வாழ்வியல் நகரமே புதையுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழர்களின் பழங்கால வீடுகள், சுற்றுச்சுவர்கள், கிணறுகள், கழிவுநீர் செல்லும் பாதைகள், தொழிற்சாலைகள் குறித்த சிதைந்த கட்டுமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதோடு தமிழர்கள் பயன்படுத்திய ஆபரணங்கள், விளையாட்டு பொருட்கள், பானைகள் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.

அமர்நாத் ராமகிருஷ்ணன், அங்கு 2-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை முடித்த நிலையில் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பின் 3-ம் கட்ட அகழாய்வு பணி ஸ்ரீராம் என்ற மத்திய தொல்லியல் அதிகாரியால் நடத்தப்பட்டது. அதன்பின் மத்திய அரசு அங்கு அகழாய்வு பணிகளை நிறுத்திவிட்டது. அதன்பின் 4-ம் கட்ட அகழ்வாராய்ச்சி, தமிழக அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டது.

தற்போது 8-ம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதற்கிடையே கீழடி அகழ்வாராய்ச்சி குறித்த விரிவான அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டது. அதில் கீழடியின் காலம் 2 ஆயிரத்து 600-ம் ஆண்டுக்கு முந்தையது என அறிவிக்கப்பட்டது.

கூடுதல் தகவல்கள்

இந்த நிலையில் அமர்நாத் ராமகிருஷ்ணன், கடந்த 2014-15-ம் ஆண்டு மற்றும் 2015-16-ம் ஆண்டுகளில் தான் நடத்திய அகழ்வாராய்ச்சி அறிக்கையை மத்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குனர் வித்யாவதியிடம் வழங்கினார். அந்த அறிக்கை மொத்தம் 982 பக்கங்களை கொண்டதாகும். இந்த அறிக்கையில் ஆய்வின் முன்னுரை, வைகை ஆற்றங்கரை சமவெளியின் அமைப்பு, வைகை ஆற்றங்கரை சமவெளிப்பகுதியில் தொல்லியல் கள ஆய்வுகள், வரலாற்று பின்னணி மற்றும் அகழாய்வுக்கான நோக்கம், தொல்லியல் மேடுகளின் நிலை, அகழாய்வு குழிகள், மண்ணடுக்கு மற்றும் கால வரிசை, தொல்லியல் கட்டிடப்பகுதிகளின் எச்சங்கள், தொல்லியல் - பானை ஓடுகள், குறியீடுகள் மற்றும் தமிழ் பிராமிகளுடன் கூடிய பானை ஓடுகள், தொல்பொருட்கள், பிறசேர்க்கைகள், தொழில் நுட்ப அறிக்கைகள் மற்றும் முடிவுரை ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த அறிக்கையை மத்திய அரசு இன்னும் சில தினங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது தான் அறிக்கையில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வெளியே தெரியவரும்.

இருப்பினும், தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ள அறிக்கையை விட, இந்த அறிக்கையில் கூடுதல் தகவல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் அமர்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில்தான் பரந்து விரிந்த அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன.

பூமிக்கடியில் புதைந்து இருந்த நகரங்களும், சங்க கால தமிழர்கள் பயன்படுத்திய பொருட்களும் அதிக அளவில் கண்டுபிடிக்கப்பட்டன. மேலும் இந்த ஆய்வறிக்கை மூலம் கீழடி குறித்த கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்