பஞ்சப்பூரில் ரூ.96.30 கோடியில் காய்கறி சந்தை-மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

திருச்சியில் ரூ.104 கோடிக்கு சாலை பணிகள் மேற்கொள்ளவும், ரூ.96.30 கோடியில் பஞ்சப்பூரில் காய்கறி சந்தை அமைக்கவும் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.;

Update: 2023-06-30 19:22 GMT

திருச்சியில் ரூ.104 கோடிக்கு சாலை பணிகள் மேற்கொள்ளவும், ரூ.96.30 கோடியில் பஞ்சப்பூரில் காய்கறி சந்தை அமைக்கவும் மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

தமிழக அரசுக்கு அ.தி.மு.க. கவுன்சிலர்கள் நன்றி

திருச்சி மாநகராட்சி சாதாரண கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நேற்று காலை நடைபெற்றது. ஆணையர் வைத்திநாதன், துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நகரப்பொறியாளர் சிவபாதம், மண்டல தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்கள், செயற்பொறியாளர்கள், உதவி கமிஷனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசினர். அத்துடன், சாலைபணிகள் மேற்கொள்ள ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்த தமிழக அரசுக்கும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருக்கும் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., ம.ம.க. மற்றும் அ.தி.மு.க., என்று அனைத்து கவுன்சிலர்களும் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசும்போது கூறியதாவது:-

தெருநாய்கள் தொல்லை

சுரேஷ் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) :- உய்யகொண்டான் கால்வாயில் கழிவுநீர் கலக்கிறது. மழைநீர்வடிகாலை தூர்வார வேண்டும். தெருநாய்கள் தொல்லை அதிகம் உள்ளது. அதை நிரந்தரமாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர்:- கூடுதல் கருத்தடை மையங்கள் அமைக்கப்பட்டு 1,097 நாய்களுக்கு இதுவரை கருத்தடை செய்யப்பட்டுள்ளது. நிரந்தரமாக கட்டுப்படுத்த ஆலோசனை கூறுங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.

சுரேஷ்குமார் (இந்திய கம்யூனிஸ்டு) :- மாநகரில் சாலைகளை அமைக்கும்போது, ஏற்கனவே உள்ள அளவை விட உயரமாக வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கீழசாராயக்கடைவீதி, குறத்தெரு, பறத்தெரு சாதி ரீதியிலான பெயர் கொண்ட வீதிகளையும் பெயர்மாற்றம் செய்ய வேண்டும். மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் எல்.கே.ஜி., யூ.கே.ஜி. மாணவ-மாணவிகளுக்கு சீருடை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் கோவிந்தசாமி (காங்.) :- மழைக்காலம் தொடங்கும் முன் சாலைப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

கவுன்சிலர் ரெக்ஸ் (காங்.) :- பாத்திமாபுரத்தில் அங்கன்வாடி மையம் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதை சொந்த கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும். தெருவிளக்குகள் இல்லாத பகுதிக்கு தெருவிளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும்.

படித்துறை சேதம்

கவுன்சிலர் முத்துக்குமார் (ம.தி.மு.க.):- ஆடி வெள்ளிக்கிழமை வர உள்ளது. இந்த நாளில் திருவானைக்காவல் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். ஆகவே அவர்களின் வசதிக்காக குடிநீர் தொட்டிகள் அமைக்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் அழகிரி புரம் படித்துறை சேதம் அடைந்துள்ளது. அதனை புதிதாக கட்ட வேண்டும்.

கவுன்சிலர் எல்.ஐ.சி. சங்கர் (சுயே.) :- மாநகராட்சி திட்ட பணிகளுக்கு நிறைய நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால் வேலை சரிவர நடக்கிறதா? என்பதை கண்காணிக்க ஆட்கள் இல்லை. எனவே தொழில்நுட்ப உதவியாளர்களை நியமித்து பணிகளை கண்காணிக்க வேண்டும்.

கவுன்சிலர் மலர்விழி (தி.மு.க.) :- எனது வார்டில் பாதாள சாக்கடை திட்ட பணிகளால் சாலை சுருங்கி, விபத்துகள் ஏற்படுகிறது.

மேயர்:- அந்த சாலை நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது. சாலைகளை சீரமைப்பதற்கு ஆரம்பத்திலேயே நெடுஞ்சாலைத்துறைக்கு பணம் செலுத்தப்பட்டுள்ளது. சாலை பணிகளை விரிவுபடுத்த நெடுஞ்சாலை துறைக்கு அழுத்தம் கொடுக்கப்படும்.

24 மணி நேரமும் குடிநீர் வினியோகம்

சாதிக் பாட்ஷா (தி.மு.க.) :- எனது வார்டுக்குட்பட்ட பகுதிகளில் குடிநீர் சரிவர வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடியிருப்பு வாசிகள் பெரிதும் சிரமப்படுகிறார்கள்.

மேயர்:- தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்தபடியாக தினமும் குடிநீர் வழங்கும் ஒரே மாநகராட்சி திருச்சி மாநகராட்சி தான். நமக்கு 75 எம்.எல்.டி. குடிநீர் தான் தேவை. ஆனால் 130 எம்.எல்.டி. வரை குடிநீர் எடுக்க நம்மால் முடியும். சோதனை முறையில் 7 வார்டுகளில் 24 மணி நேரமும் தண்ணீர் வினியோகம் செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது. விரைவில் அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் வினியோகம் செய்யப்படும்.

கவுன்சிலர் அம்பிகாபதி (அ.தி.மு.க.) :- புதுக்கோட்டை சாலையில் ஏர்போர்ட் பகுதி முதல் செம்பட்டு வரை மின்விளக்கு பொருத்த வேண்டும். வயர்லெஸ் ரோடு பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். சாலைபணிகளுக்கு நிதி ஒதுக்கிய தமிழக அரசுக்கு நன்றி.

மேயர்:- தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த அ.தி.மு.க. கவுன்சிலருக்கு நெஞ்சார்ந்த நன்றி.

மண்டல குழு தலைவர் விஜயலட்சுமி கண்ணன்:- மாணவிகள் விடுதியில் இருந்து நாப்கின் கழிவுகளை கழிவுநீர் குழாயில் போடுவதால் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்படுகிறது. இதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐதராபாத்துக்கு அனுப்ப வேண்டும்

மேயர்:- அனைத்து விடுதிகள், ஓட்டல்களில் பில்டர் வைத்து கழிவு நீரை மட்டும் பாதாள சாக்கடைகளில் திறந்து விட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்து கொண்டிருக்க தி.மு.க. கவுன்சிலர் ஒருவர் பெண் கவுன்சிலர்களை எல்லாம் ஐதராபாத்துக்கு அனுப்பிவைத்தீர்கள். எங்களை (ஆண் கவுன்சிலர்கள்) எப்போது அனுப்பி வைப்பீர்கள் என்று கேட்டார். விரைவில் அனுப்புவோம் என்று மேயர் பதில்கூறினார்.

பஞ்சப்பூரில் காய்கறி சந்தை

மேலும் திருச்சி பஞ்சப்பூரில் உள்ள பசுமை பூங்கா வளாகத்தில் ரூ.96.30 கோடியில் காய்கறி சந்தை வளாகம் அமைக்க இருப்பதால் மரங்கள் பாதிக்கப்படும் என்று கவுன்சிலர்கள் கூறினர்.

அதற்கு ஆணையர், பஞ்சப்பூரில் ஏற்கனவே ஒருங்கிணைந்த பஸ் நிலையம், லாரிகள் நிறுத்துமிடம், பன்னோக்கு வசதி அலாரம் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன. இப்போது அதே பகுதியில் மொத்த காய்கறி சந்தை வளாகம் அமைக்கப்பட உள்ளது. ஏற்கனவே மாநகரில் 1 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வருகிறோம், என்றார்.

இதைத்தொடர்ந்து ரூ.104 கோடிக்கு சாலைபணிகள் மேற்கொள்வது, திருச்சி பஞ்சப்பூரில் உள்ள பசுமை பூங்கா வளாகத்தில் ரூ.96.30 கோடியில் காய்கறி சந்தை வளாகம் அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்புவது என்பன உள்பட 89 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்