பிளஸ்-2 தேர்வில் 95.93 சதவீதம் பேர் தேர்ச்சி எஸ்.எஸ்.எல்.சி.யில் 92.25 சதவீதம் பேர் தேர்ச்சி

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.93 சதவீதம் பேரும், எஸ்.எஸ்.எல்.சி.யில் 92.25 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.

Update: 2022-06-20 20:06 GMT

திருச்சி, ஜூன்.21-

திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 95.93 சதவீதம் பேரும், எஸ்.எஸ்.எல்.சி.யில் 92.25 சதவீதம் பேரும் தேர்ச்சி பெற்றனர்.

பிளஸ்-2ல் தேர்ச்சி

தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வை 14 ஆயிரத்து 890 மாணவர்களும், 16 ஆயிரத்து 941 மாணவிகளும் என 31 ஆயிரத்து 831 பேர் எழுதினார்கள். இதில் 13 ஆயிரத்து 894 மாணவர்களும், 16 ஆயிரத்து 643 மாணவிகளும் என 30 ஆயிரத்து 537 பேர் தேர்ச்சி அடைந்தனர். பிளஸ்-2 வில் திருச்சி மாவட்டத்தில் மாணவர்கள் 93.31 சதவீதம் ேபரும், மாணவிகள் 98.24 சதவீதம் பேரும் என 95.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை, பிளஸ்-2வில் ஒரு மாநகராட்சி பள்ளி உள்பட 89 அரசு பள்ளிகளும், 14 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளும், 1 பார்வைதிறன் குறைபாடுடையோருக்கான பள்ளி, 46 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 81 மெட்ரிக் மற்றும் சுயநிதி பள்ளிகளும், 28 பகுதி உதவி பெறும் பள்ளிகளும் என மொத்தம் 259 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது.

கடந்த 2020-21-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலை தடுக்கும் விதமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் பிளஸ்-2வில் 100 சதவீதம் தேர்ச்சி அறிவிக்கப்பட்டது. அதற்கு முந்தைய (2019-20) ஆண்டு திருச்சி மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதியவர்களில் 95.94 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்தனர்.

எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு

திருச்சி மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி.யில் 5 மாநகராட்சி பள்ளிகள், ஒரு நகராட்சி பள்ளி உள்பட 192 அரசு பள்ளிகளும், 55 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 135 சுயநிதி மற்றும் மெட்ரிக் பள்ளிகளும், 41 பகுதி உதவி பெறும் பள்ளிகளும், 3 பழங்குடியினர் நலப்பள்ளிகளும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகளும், 27 ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளும், உள்பட மொத்தம் 455 பள்ளிகள் உள்ளன.

திருச்சி மாவட்டத்தில் இந்தாண்டு எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 16 ஆயிரத்து 615 மாணவர்களும், 16 ஆயிரத்து 942 மாணவிகளும் என மொத்தம் 33 ஆயிரத்து 557 பேர் எழுதினர்.

இதில் 14 ஆயிரத்து 562 மாணவர்களும், 16 ஆயிரத்து 396 மாணவிகளும் என 30ஆயிரத்து 958 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் மாணவர்கள் 87.64 சதவீதமும், மாணவிகள் 96.78 சதவீதமும் என மொத்தம் 92.25 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2019-20, 2020-21-ம் கல்வியாண்டுகளில் கொரோனா தொற்று பரவலை தடுக்க பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதன் காரணமாக எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களுக்கு 100 சதவீதம் பேர் தேர்ச்சி வழங்கப்பட்டது. அதற்கு முந்தைய 2018-19-ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி.யில் 96.45 சதவீதம் தேர்ச்சி பெற்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெறிச்சோடிய பள்ளிகள்

தேர்வு முடிவுகளை பெரும்பாலான மாணவ-மாணவிகள் செல்போன்களிலும், இணையதளங்களிலும் தேர்ச்சி விவரங்களை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக ஒரு சில பள்ளிகளை தவிர, திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் இருந்த பள்ளிகள் வெறிச்சோடி கிடந்தன. மேலும், தேர்வு முடிவுகளை மாணவிகளுடன் சேர்ந்து பெற்றோரும் ஆர்வமுடன் பார்த்து தெரிந்து கொண்டனர். ஒரு சில மாணவிகள் தங்கள் மதிப்பெண்கள் குறைந்து இருந்ததை கண்டு கண்ணீர்விட்டு அழுதனர். அவர்களுக்கு சக மாணவிகள், பெற்றோர் ஆறுதல் கூறினர். இதேபோல் அதிகமதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு பெற்றோரும், ஆசிரியர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்