அடுத்த கல்வியாண்டில் 95 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டம் அடுத்த கல்வியாண்டில் அரசு பொதுத்தேர்வில் 95 சதவீதம் தேர்ச்சிபெற வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு, கலெக்டர் வளர்மதி அறிறுரை வழங்கினார்.

Update: 2023-05-25 18:13 GMT

ஆய்வு கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்கள் மற்றும் எதிர்வரும் கல்வியாண்டில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது குறித்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி நடப்பு கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளில் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்களை ஒவ்வொரு பள்ளிகள் வாரியாக கேட்டறிந்தார். பெரும்பான்மையான பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவுவதும், மாணவர்கள் தேர்வு எழுதாமல் நின்றுவிட்டதாலும் தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது எனவும், கொரோனா தொற்று காலத்தில் ஏற்பட்ட கற்றல் இடைவெளி பிரச்சினையும் காரணமாக உள்ளது என தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

ஆசிரியர்கள் இருந்தும் அந்த பாடப்பிரிவில் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து கேட்டறிந்து, மாணவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பாடங்களை நடத்தவில்லையா? என கேள்வி எழுப்பினார். தனியார் கல்வி நிறுவனங்கள் கொரோனா கால இடைவெளியை பூர்த்தி செய்து மாவட்டங்களில் தேர்ச்சி விகிதங்கள் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி அதை ஏன் ராணிப்பேட்டை மாவட்டம் எய்தவில்லை என தலைமை ஆசிரியர்களிடம் கேள்வி எழுப்பினார்.

பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

95 சதவீதம்

நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர் பற்றாக்குறையை போக்க தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். தொடக்க நாள் முதல் ஒவ்வொரு நாளும் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் மறுநாள் தேர்வு நடத்தி அவர்களின் அறிவை பரிசோதிக்க வேண்டும். புரியவில்லையென்றால் மீண்டும் புரியும்படி மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். அடிக்கடி தேர்வுகள் வைத்து மாணவர்களின் திறமையை கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கற்றல் அறிவு குறைவாக உள்ள மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தனி பயிற்சியளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தலைமை ஆசிரியர்கள் வரும் கல்வியாண்டில் கட்டாயம் 95 சதவீதத்திற்கு மேல் தேர்ச்சி விகிதம் இருப்பதை உறுதி செய்யும் வகையில் அதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.

முன்னாள் மாணவர்களை...

6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவ -மாணவிகளுக்கு அவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் பாடங்கள் நடத்த வேண்டும். அப்போதுதான் அவர்கள் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பிற்கு வரும் பொழுது நல்ல தேர்ச்சியை கொடுக்க முடியும். சரியாக படிக்காத பிள்ளைகளின் பெற்றோர்களை வரவழைத்து பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

அனைத்து பள்ளிகளும் அவ்வப்போது நல்ல நிலையில் உள்ள முன்னாள் மாணவர்களையும், நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவம் படித்து வரும் மாணவ -மாணவிகளையும் அழைத்து மாணவ- மாணவிகளுக்கு அறிவுரைகளை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

தற்போது துணைத் தேர்வு எழுத உள்ள மாணவ மாணவிகளுக்கு ஆசிரியர்கள் நல்ல முறையில் பயிற்சி கொடுக்க வேண்டும். மாணவ மாணவிகளின் கல்வி அறிவை வளர்க்க முழு மனதுடன் பணியாற்றுவதை இலக்காக கொண்டு ஆசிரியர்கள் பணி செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட கல்வி அலுவலர் சுப்பாராவ் மற்றும் தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்