91,816 பயனாளிகள் தேர்வு

கலைஞர் மகளிா் உரிமை திட்டத்தில் மாவட்டம் முழுவதும் 91 ஆயிரத்து 816 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்.

Update: 2023-09-20 18:45 GMT

சின்னசேலம்

கலெக்டர் ஆய்வு

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் ரூ.1,000 கிடைக்கப்பெறாத மகளிர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து தாலுகா அலுவலகங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள உதவி மையத்தை அணுகி தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் தொடங்கப்பட்டுள்ள கலைஞர் மகளிர் உரிமை திட்ட உதவி மையத்தை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் நோில் ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த குடும்ப தலைவிகளிடம் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடர்பாக கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

பின்னா் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

3½ லட்சம் விண்ணப்பங்கள்

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையின்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1,000 அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்ப நிலை குறித்த குறுஞ்செய்தி அவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிற்கு கடந்த 19-ந் தேதி முதல் அனுப்பிவைக்கப்படுகிறது.

மாவட்டத்தைப் பொறுத்தவரை இத்திட்டத்தின் கீழ் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் வழங்கப்பட்ட 4 லட்சத்து 34 ஆயிரத்து 663 விண்ணப்பங்களில், 3 லட்சத்து 67 ஆயிரத்து 404 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இதுவரை 91 ஆயிரத்து 816 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பயனாளிகள் விடுபடாமல்

கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்தின் நிலையை தெரிந்து கொள்ள, தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி, கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் இதற்கென பிரத்யேகமாக கலைஞர் மகளிர் உரிமை திட்ட உதவி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில் சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் உள்ள உதவி மையத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, விண்ணப்பத்தின் நிலையை அறிந்துகொள்ள வந்த குடும்ப தலைவிகளிடம் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. தகுதியுள்ள பயனாளிகள் விடுபடாமல் இத்திட்டத்தின்கீழ் பயன்பெற சேர்த்திடுமாறு வருவாய்த்துறை உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேல்முறையீடு செய்யலாம்

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின்கீழ் தகுதியுள்ள பயனாளிகளுக்கு ரூ.1,000 பெறுவதற்கான குறுஞ்செய்தி, வங்கிகணக்கிற்கு பணம் வரவில்லையென்றால் இம்மையத்தை அணுகி விண்ணப்பத்தின் நிலை குறித்து தெரிந்து கொண்டு, மேல்முறையீடு செய்யலாம். குறுஞ்செய்தி பெறப்பட்ட 30 நாட்களுக்குள் அனைத்து இ-சேவை மையங்களிலும் கட்டணமின்றி வருவாய் கோட்டாட்சியருக்கு மேல்முறையீடுசெய்யலாம்.

இவ்வாறு அவா் கூறினார்.

இந்த ஆய்வின்போது, சின்னசேலம் தாசில்தார் கமலக்கண்ணன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ரகோத்தமன் மற்றும் வருவாய்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்