பிளஸ்-2 தேர்வில் 91.26 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

பிளஸ்-2 தேர்வில் 91.26 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி

Update: 2022-06-20 18:10 GMT

திருவாரூர் மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 91.26 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 5 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

தேர்வு முடிவுகள்

பிளஸ்-2 தேர்வு கடந்த மே மாதம் 5-ந்தேதி தொடங்கி 28-ந்தேதி வரை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் 5 ஆயிரத்து 830 மாணவர்கள், 7 ஆயிரத்து 5 மாணவிகள் என மொத்தம் 12 ஆயிரத்து 835 பேர் தேர்வு எழுதினர்.

தமிழகத்தில் பிளஸ்-2 தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 5 ஆயிரத்து 119 மாணவர்கள், 6 ஆயிரத்து 594 மாணவிகள் என மொத்தம் 11 ஆயிரத்து 713 பேர் தேர்ச்சி பெற்றனர்.

91.26 சதவீதம் தேர்ச்சி

அதன்படி 87.80 சதவீதம் மாணவர்களும், 94.13 சதவீதம் மாணவிகளும் தேர்ச்சி அடைந்தனர். அதன்படி மாவட்ட அளவில் தேர்ச்சி சதவீதம் 91.26 ஆகும். திருவாரூர் மாவட்டம் மாநில அளவில் 32-ம் இடத்தை பிடித்துள்ளது. இந்த தேர்வு முடிவுகள் விவரம் இணைதளங்களில் மூலம் வெளியிடப்பட்ட நிலையிலும், அனைத்து பள்ளிகளில் தேர்ச்சி குறித்து அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்தன. இதனை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து, தங்களது தேர்ச்சியை கண்டு மகிழ்ந்தனர்.

5 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

திருவாரூர் மாவட்டத்தில் 29 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. அதன்படி பொதக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேரன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி, உள்ளிக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, மகாதேவப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி, ஆலங்கோட்டை அரசு திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 5 அரசு பள்ளிகளும், 24 மெட்ரிக், தனியார் பள்ளிகளும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்