கல்லூரி விடுதியில் 'ராக்கிங்'கில் ஈடுபட்ட 9 மாணவர்கள் இடை நீக்கம்

செய்யாறு அரசு கலைக்கல்லூரி விடுதியில் ‘ராக்கிங்’கில் ஈடுபட்ட 9 மாணவர்களை இடைநீக்கம் செய்து கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2023-04-26 16:18 GMT

செய்யாறு

செய்யாறு அரசு கலைக்கல்லூரி விடுதியில் 'ராக்கிங்'கில் ஈடுபட்ட 9 மாணவர்களை இடைநீக்கம் செய்து கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

அரசு கலைக்கல்லூரி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் 70 சதவீதம் பேர் வெளியூர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் படித்து வருகின்றனர்.

இவ்வாறு வருபவர்களில் பலர் கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். மாணவிகள் மட்டும் தங்கிப்படிப்பதற்காக ஒரு விடுதியும், மாணவர்களுக்கென 2 விடுதியும் என மொத்தம் 3 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

இதில் பைங்கினர் அண்ணா நகர் பகுதியில் செயல்பட்டு வரும் ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் நடைபெற்று வரும் விடுதியில் முதலாம் ஆண்டில் 19 மாணவர்களும், இரண்டாம் ஆண்டில் ஒரு மாணவரும், மூன்றாம் ஆண்டில் 8 மாணவர்களும் என்று மொத்தம் 28 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.

சாட்டையால் அடித்து 'ராக்கிங்'

இந்த நிலையில் திங்கட்கிழமை இரவு அந்த விடுதியில் உள்ள 2 மற்றும் 3-ம் ஆண்டு பயிலும் மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவர்களை செய்ய சொன்ன பணியை, அவர்கள் செய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த மூன்றாம் ஆண்டு மாணவர்கள் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை சாட்டை கயிறு மூலம் சாட்டையடி கொடுத்து தண்டனை வழங்கி ராக்கிங் செய்துள்ளனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவத் தொடங்கியது.

இடைநீக்கம்

இதுபற்றி தகவல் அறிந்த அரசு அறிஞர் அண்ணா கலைக் கல்லூரி முதல்வர் கலைவாணி, ராக்கிங் சம்பவத்தில் தொடர்புடைய 2 மற்றும் 3-ம் ஆண்டு பயிலும் 9 மாணவர்களை வரவழைத்து கல்லூரி துறை பேராசிரியர்கள் மூலம் விசாரணை நடத்தினார்.

அதில் ராக்கிங்கில் சீனியர் மாணவர்கள் ஈடுபட்டது உறுதியானது.

இது குறித்த அறிக்கை சமர்பிக்கப்பட்டதை தொடர்ந்து கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவின்பேரில் கல்லூரி முதல்வர், ராக்கிங்கில் ஈடுபட்ட 9 மாணவர்களை 1 மாத காலம் கல்லூரி மற்றும் விடுதியில் இருந்து தற்காலிகமாக இடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்