9-ம் வகுப்பு மாணவி பாறைக்குழியில் பிணமாக மீட்பு

9-ம் வகுப்பு மாணவி பாறைக்குழியில் பிணமாக மீட்பு

Update: 2022-10-16 12:23 GMT

அனுப்பர்பாளையம்

திருப்பூர் அம்மாபாளையம் அருகே பள்ளிக்குசெல்வதாக கூறிவிட்டு சென்ற 9-ம் வகுப்பு மாணவி பாறைக்குழியில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மாணவி

திருப்பூர்-அவினாசி ரோடு எஸ்.ஏ.பி. சந்திப்பை அடுத்த பத்மாவதிபுரம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இவருைடய மனைவி சந்தியாதேவி. இவர்களின் 2-வது மகள் காயத்ரி (வயது 14). இவர் அவினாசி பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது மாணவிக்கு, ஒரு மாணவருடன் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த விவரம் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து காயத்ரியை அவினாசி பள்ளியில் இருந்து விடுவித்து திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த மாதம் சேர்த்தனர்.

மேலும் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வந்த காயத்ரியை காலாண்டு விடுமுறைக்கு பின்னர் ராயபுரத்தில் உள்ள அரசு மாணவிகள் விடுதியில் தங்கி படிப்பதற்காக பெற்றோர் காயத்ரியை அங்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சேர்த்தனர். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி மாலை காயத்ரியின் தந்தை ரமேஷ்குமார் பள்ளி முடிந்ததும் மகளை பார்ப்பதற்காக பள்ளிக்கு சென்றுள்ளார். ஆனால் பள்ளி முடிந்தும் நீண்ட நேரமாக மகள் வராதால் பள்ளிக்குள் சென்று, காயத்ரியின் வகுப்பு ஆசிரியையிடம் கேட்டுள்ளார்.

பள்ளிக்கு வரவில்லை

அப்போது காலையில் இருந்தே காயத்ரி பள்ளிக்கு வரவில்லை என்று ஆசிரியை கூறி உள்ளார். இதனால் பதறிபோன ரமேஷ்குமார் உடனடியாக காயத்ரி தங்கி இருந்த விடுதிக்கு சென்று விசாரித்துள்ளார். அங்கிருந்த ஊழியர் காயத்ரி காலையில் பள்ளிக்கு செல்வதாக கூறி சீருடை அணிந்து, பள்ளிப் பையை எடுத்துச் சென்றதாக கூறி உள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மாணவியை பல்வேறு இடங்களில்தேடினர். ஆனாலும் கண்டு பிடிக்க முடியவில்லை. இதையடுத்து திருப்பூர் வடக்கு போலீசில் ரமேஷ்குமார் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் அருகே கானக்காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான பாறைக்குழியில் பள்ளி சீருடையில் மாணவியின் உடல் திருமுருகன்பூண்டி போலீசார் மற்றும் அவினாசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அந்த உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மாணவி கொண்டு சென்ற புத்தகப்பை, அவர் அணிந்து இருந்த காலணி ஆகியவை பாறைக்குழி கரையில் இருந்தது. இதையடுத்து அந்த மாணவி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று போலீசார் விசாரித்தனர். மேலும் திருப்பூர் மாநகர் பகுதியில் மாணவி யாராவது காணவில்லை என்று புகார் பதிவாகி உள்ளதா? என்ற விவரம் சேகரித்தனர். அப்போது கடந்த 12-ந் தேதி தனது மகள் காயத்தியை காணவில்லை என்று ரமேஷ்குமார் திருப்பூர் வடக்கு போலீசில் புகார் செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரமேஷ் குமார் மற்றும் அவருடைய மனைவி ஆகியோர் பாறைக்குழி வந்து காயத்ரியை அடையாளம் காட்டினர். பின்னர் அவருடைய உடலை பார்த்து கதறி அழுதனர். அதன்பின்னர் மாணவியின் உடல்

பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கொலையா? போலீசார் விசாரணை

இது குறித்து திருமுருகன் பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில் கடந்த 12-ந்தேதி பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற காயத்ரி 3 பேருடன் அம்மாபாளையம் பகுதியில் உள்ள பாறைக்குழிக்கு சென்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து காயத்ரியினுடன் சென்றவர்களை பிடித்து அனுப்பர்பாளையம் சரக போலீஸ் உதவி கமிஷனர் நல்லசிவம் தலைமையில், திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் உள்ளிட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். சம்பந்தப்பட்ட பாறைக்குழிக்கு காயத்ரி உள்பட 4 பேர் சென்ற நிலையில் அந்த பகுதிக்கு எதற்காக சென்றனர்? காயத்ரி எதற்காக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? 5 நாட்கள் ஆன பின்னரும் காயத்ரியுடன் சென்ற 3 பேர் ஏன் இந்த தகவலை வெளியில் கூறவில்லை என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடக்கி உள்ளனர்.

இதுகுறித்து திருமுருகன்பூண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் அருகே பாறைக்குழியில் 9-ம் வகுப்பு மாணவி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

-----------------------

சாவில் மர்மம் உள்ளது

காயத்ரியின் தந்தை பரபரப்பு பேட்டி

மாணவியின் தந்தை ரமேஷ்குமார் கூறியதாவது, கடந்த 11-ந்தேதி இரவு ராயபுரம் விடுதியில் தங்கிய எனது மகள், மறுநாள் காலை பள்ளிக்கு செல்லவில்லை என்பது தெரிந்ததும் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அந்த அன்றே எனது மகளுடன் சேர்ந்து 4 பேர் பாறைக்குழி பகுதிக்கு சென்றதாகவும், அங்கு 4 பேரும் கைகோர்த்து நின்றதாக கூறுகின்றனர். ஆனால் எனது மகள் மட்டும் எப்படி தண்ணீரில் குதித்து இறந்திருக்க முடியும். எனது மகள் சாவில் மர்மம் உள்ளது. எனது மகளுடன் சென்றதாக கூறப்படும் 3 பேர், அவர்களுடைய பெற்றோர் மற்றும் இந்த சம்பவம் தொடர்பாக என்னிடம் பேசிய வழக்கறிஞர் உள்பட அனைவரிடமும் முறையாக விசாரணை நடத்தப்பட வேண்டும். எனது மகள் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

----

குணா சினிமா பாணியில் சம்பவம் நடைபெற்றதா?

மாணவி காயத்ரி பாறைக்குழியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பரவி அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. சம்பவத்தன்று உயிரிழந்த மாணவி காயத்ரியுடன் மற்ற 3 பேரும் சம்பந்தப்பட்ட பாறைக்குழிக்கு சென்றதாக தெரிகிறது. பின்னர் அங்கு 4 பேரும் ஒன்றாக கைகோர்த்து நின்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் காயத்ரியிடம் பிரேம், நீ என்னை உண்மையாக காதலிப்பதாக இருந்தால் தண்ணீரில் குதி பார்க்கலாம் என்று கூறியதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் உணர்ச்சிவசப்பட்ட காயத்ரி சினிமா பாணியில் தண்ணீரில் குதித்தாரா? என்பது தெரியவில்லை. இதுதொடர்பாக முழுமையாக விசாரணை நடத்திய பிறகே முழு உண்மையும் தெரிய வரும்.

--

பாக்ஸ் செய்தி-2

மரண குழிகளாக மாறிவரும் பாறைக்குழிகள்

திருமுருகன்பூண்டியை அடுத்த அம்மாபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பாறைக்குழிகள் உள்ளன. அங்கு பள்ளி மாணவர்கள், சிறுவர்கள் உள்பட பலர் குளிக்க சென்று, உயிரிழக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. இதேபோல் ஒருசில தற்கொலை சம்பவங்களும் அந்த பாறைக்குழிகளில் அரங்கேறுகிறது. பாதுகாப்பு இல்லாத நிலையில் உள்ள அந்த பாறைக்குழிகளை மூட வேண்டும் என்று அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனாலும் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு இல்லாத சூழலே நிலவி வருகிறது. அடுத்தடுத்து உயிரிழப்புகளுக்கு காரணமாக உள்ள அந்த பாறைக்குழிகளை மூட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.



Tags:    

மேலும் செய்திகள்