கருமந்துறை அரசு ஆஸ்பத்திரி சுகாதார ஆய்வாளர் வீட்டில் 9¼ பவுன் நகை திருட்டு
கருமந்துறை அரசு ஆஸ்பத்திரி சுகாதார ஆய்வாளர் வீட்டில் 9¼ பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பெத்தநாயக்கன்பாளையம்:
சுகாதார ஆய்வாளர்
பெத்தநாயக்கன்பாளையம் தாலுகா கருமந்துறை பெத்தேல் நகரை சேர்ந்தவர் சுசில் தேவக்கண் (வயது 58). இவர் கருமந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார ஆய்வாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பியூலா ஜூலியட். இந்த தம்பதியினர் அந்த பகுதியில் சிறுவர் இல்லம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் பியூலா ஜூலியட், தாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவரை, பியூலா ஜூலியட் உடன் இருந்து கவனித்து வருகிறார். இதனிடையே சுசில் தேவக்கண் நேற்று முன்தினம் ஆஸ்பத்திரிக்கு சென்றார். இரவில் அவர் சிறுவர் இல்லத்தில் தங்கினார்.
9¼ பவுன் நகை திருட்டு
பின்னர் நேற்று காலை வீட்டுக்கு திரும்பியபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கு 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதில் வைக்கப்பட்டிருந்த, தங்க சங்கிலி, வளையல், கம்மல் என 9¼ பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் கருமந்துறை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, கைரேகைகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 9¼ பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.