மதுரையில் மகளிர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்த 9 பேர் கைது- 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
மதுரையில் மகளிர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்்த 9 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுரையில் மகளிர் கல்லூரிக்குள் அத்துமீறி நுழைந்்த 9 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கல்லூரிக்குள் புகுந்த வாலிபர்கள்
தேவர் ஜெய்ந்தி அன்று மதுரை நகரில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர். மேலும் மோட்டார் சைக்கிள்களில் அதிவேகமாகவும், அதிக நபர்களை ஏற்றிக்கொண்டு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் தேவர் ஜெயந்தி அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் பீ.பி.குளம் பகுதியில் உள்ள மகளிர் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது.
அப்போது கல்லூரி கதவுகள் லேசாக திறந்து வைக்கப்பட்டு, காவலாளிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அந்த நேரத்தில் 4 மோட்டார் சைக்கிள்களில் 11 வாலிபர்கள் திடீரென்று சத்தம் போட்டுக்கொண்டே உள்ளே புகுந்தனர். அவர்களை காவலாளி பூமி தடுத்து நிறுத்தினார். ஆனால் மோட்டார் சைக்கிள்களில் வந்தவர்கள் அவர் மீது ஏற்ற முயன்றதாகவும், கல்லூரி விடுதியில் இருந்த மாணவிகளை ஆபாசமாக பேசி அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
9 பேர் கைது
இது குறித்து கல்லூரி மேற்பார்வையாளர் பூப்பாண்டி தல்லாகுளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதை அறிந்த போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனே கைது செய்யுமாறு உத்தரவிட்டார். அதை தொடர்ந்து தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த சூரியா (வயது 19), முத்துநவேஷ் (19), புதூர் காந்திபுரம் வீரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த அருண்பாண்டியன் (20), சேதுபாண்டி (19), மணிகண்டன் (19), புதூர் சங்கர் நகரை சேர்ந்த மணிகண்டன் (19), ஆத்திக்குளம் ஐலோண்ட் நகர் முத்துவிக்னேஷ் (19), காந்திபுரம் பாண்டியன் நகர் வில்லியம் பிரான்சிஸ் (20), விமல்ஜாய் பேட்ரிக் (19) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
இந்த சம்பவத்தில் தலைமறைவாக உள்ள 2 வாலிபர்களை போலீசார் தேடி வருகிறார்கள். நகரில் பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும், வேகமாகவும், மோட்டார் வாகன விதிகளை மீறி இருசக்கர வாகனங்களை ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.