வாலிபரை தாக்கிய 9 பேர் கைது
வாலிபரை அரிவாளால் தாக்கிய வழக்கில் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.;
அம்பை:
வாலிபரை அரிவாளால் தாக்கிய வழக்கில் 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஒரு தலைக்காதல்
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அம்பலவாணபுரத்தைச் சேர்ந்த ரகுகுமார் (வயது 21) என்பவரின் நண்பரான மணிகண்டன் என்பவருக்கு தெரிந்த ஒரு பெண்ணை, அம்பை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த சங்கர் (19) என்பவர் ஒருதலையாக காதலித்து வருவதாக கூறப்படுகிறது.
இதனால் மணிகண்டனுக்கும், சங்கருக்கும் இரண்டு மாதங்களுக்கு முன் பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
மோதல்
இந்நிலையில் மணிகண்டனை நேற்று முன்தினம் பாபநாசத்தில் வைத்து சங்கர் அவரது நண்பர்களான சுந்தர் (23), ஹரிகணேஷ் (19), பிரகாஷ் (25), விக்னேஷ் (19) உள்ளிட்டோர் அடித்து காயப்படுத்தி உள்ளனர்.
இதில் காயம் அடைந்த மணிகண்டன் அம்பை அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இதனை கேள்விப்பட்ட ரகுகுமார், மணிகண்டனை பார்க்க அம்பை அரசு மருத்துவமனைக்கு சென்றார். அப்போது சுந்தர், ரகுகுமாரை அரிவாளால் தாக்கி காயம் ஏற்படுத்தினார். மற்றவர்கள் அவரை அடித்தும் மிரட்டல் விடுத்துள்ளனர்.
9 பேர் கைது
இது குறித்து ரகுகுமார் அம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் (பொ) பாமாபத்மினி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதுதொடர்பாக சங்கர் உள்பட 9 பேரை கைது செய்தார்.