ஜல்லிக்கட்டு போட்டியில் மின்சாரம் பாய்ந்து 9 பேர் காயம்- புதுக்கோட்டையில் பரபரப்பு
காயம் அடைந்த 9 பேர் சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடியில் முத்துமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது.
போட்டியின்போது வாடியில் இருந்து வெளியே வந்த மாடு, மின்கம்பத்தை இழுத்து கட்டியிருந்த ஸ்டீல் கம்பியில் மோதியதில், உயர் மின்னழுத்த கம்பியில் கசிவு ஏற்பட்டது.
அப்போது அருகே உள்ள பேரிகார்டில் கைவைத்து நின்றுகொண்டிருந்த பார்வையாளர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் என மொத்தம் 9 பேர் மின் கசிவின் காரணமாக காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ஜல்லிக்கட்டு களத்தின் அருகே நிற்கவைக்கப்பட்டிருந்த ஆம்புலன்சில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.