நாட்டறம்பள்ளி அருகே, சாலை விபத்தில் காயம் அடைந்த 9 பேருக்கு ரூ.4½ லட்சம் நிதியுதவி-கிருஷ்ணகிரி கலெக்டர் நேரில் வழங்கி ஆறுதல்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சாலை விபத்தில் காயம் அடைந்து கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் 9 பேரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய கிருஷ்ணகிரி கலெக்டர் அவர்களுக்கு ரூ.4½ லட்சம் நிதிஉதவியை வழங்கினார்.

Update: 2023-09-11 18:45 GMT

9 பேருக்கு ரூ.4.50 லட்சம் நிதியுதவி

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டை அடுத்த திரு வி.க.நகர் ஓணான்குட்டை பகுதியை சேர்ந்த 35 பேர், கடந்த 8-ந் தேதி கர்நாடக மாநிலத்துக்கு 2 வேன்களில் சுற்றுலா சென்றனர். பெங்களூருக்கு சுற்றுலா சென்றுவிட்டு நேற்று காலை சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சென்று கொண்டிருந்த போது, அவர்கள் வந்த வேன்களில் ஒன்று பழுதானது.

இதையடுத்து சாலையோரம் வேனை நிறுத்தி சரி செய்துக் கொண்டிருந்த போது, அந்த வழியாக வந்த மினி லாரி, வேன் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே 7 பெண்கள் இறந்தனர். டிரைவர்கள் உள்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

இதில் படுகாயம் அடைந்த 9 பேர், சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை கிருஷ்ணகிரி கலெக்டர் சரயு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து காயமடைந்த 9 பேருக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.4½ லட்சத்திற்கான காசோலைகளை வழங்கினார்.

சிறப்பான சிகிச்சை

பின்னர் கலெக்டர் சரயு கூறும் போது, 'விபத்தில் காயமடைந்து இங்கு சிகிச்சை பெற்று வரும் 9 பேருக்கும் சிறப்பான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது அவர்களின் நிலை சீராக உள்ளது' என்றார்.

அப்போது மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் பூவதி, கண்காணிப்பாளர் டாக்டர் சந்திரசேகர், வேலூர் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அப்துல்முனீர், கலெக்டர் அலுவலக மேலாளர் வெங்கடேசன், தாசில்தார் விஜயகுமார், துணை தாசில்தார் மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்