மது-சாராயம் விற்ற பெண்கள் உள்பட 9 பேர் கைது
நாகையில் மது-சாராயம் விற்பனை செய்த பெண்கள் உள்பட 9 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.;
ரோந்து பணி
நாகை சுற்றுவட்டார பகுதிகளில் தனிப்படை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
அப்போது நல்லியான்தோட்டத்தில் மது விற்பனை செய்த அதே பகுதியை சேர்ந்த சுந்தராம்பாள் (வயது63), சிந்தாமணி (62), விஜயலட்சுமி (56), மச்சி (55), தேடா செல்வம் (71) ஆகிய 5 பெண்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 500 புதுச்சேரி மாநில மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
400 மதுபாட்டில்கள் பறிமுதல்
இதேபோல வடக்கு பொய்கைநல்லூரில் மது விற்ற அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் சந்தோஷ் (20) என்பரை கைது செய்து அவரிடம் இருந்து 300 சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர். நாகை வண்டிப்பேட்டையில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த பாண்டி மனைவி செல்வம் (67) என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து 20 சாராய பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
அதேபோல நாகூர் அருகே காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்களை கடத்தி வந்த நாகையை சேர்ந்த சதீஷ் (42), ஸ்ரீதர் (19) ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 400 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
சூப்பிரண்டு பாராட்டு
இந்த மதுபாட்டில்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 மோட்டார் சைக்கிள்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் நேரில் பார்வையிட்டு, சிறப்பாக பணியாற்றிய தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார்.
9 பேர் கைது
நாகையில் ஒரே நாளில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் மது-சாராயம் விற்ற 6 பெண்கள் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.