9 பேர் பலியான இடத்தில்போலீஸ் ஐ.ஜி. சுதாகர் ஆய்வு

கிருஷ்ணகிரியில் 9 பேர் பலியான வெடி விபத்து நடந்த இடத்தில் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2023-08-02 18:45 GMT

வெடி விபத்து

கிருஷ்ணகிரி பழையபேட்டையில் கடந்த 29-ந் தேதி பட்டாசு குடோன் ஒன்றில் நடந்த வெடி விபத்தில் 9 பேர் பலியானார்கள். 15 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் அந்த குடோன் மற்றும் அருகில் உள்ள 5 கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமானது. அருகில் இருந்த ஏராளமான கட்டிடங்கள் சேதமடைந்தன.

மேலும் சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் பலரும், சுற்றி கடைகளில் இருந்த பலரும் காயம் அடைந்தனர். அதேபோல விபத்து நடந்த இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ஆட்டோ, மோட்டார்சைக்கிள்கள் பலத்த சேதமடைந்தன.

இரங்கல்

இந்த விபத்து தொடர்பாக கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, கவர்னர் ரவி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.மேலும் மத்திய, மாநில அரசுகள் சார்பில் நிவாரண உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த நாள் முதல் தொடர்ச்சியாக காவல் துறை சார்பிலும், தடயவியல் துறை சார்பிலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.

ஐ.ஜி. நேரில் விசாரணை

இந்த நிலையில், கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி ஆகியோர் நேற்று கிருஷ்ணகிரிக்கு வந்தனர். அவர்கள் பட்டாசு குடோன் விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். இடிந்த கட்டிடங்களை பார்வையிட்ட அவர்கள் உடல்கள் தூக்கி வீசப்பட்ட இடங்களை பார்த்து ஆய்வு செய்தனர்.

மேலும் சம்பவ இடத்தை ட்ரோன் கேமரா மூலமாக பதிவு செய்த அவர்கள், விபத்து நடந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை சேகரித்து ஆய்வு செய்தனர். இது குறித்து கோவை மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகரிடம் கேட்ட போது விசாரணை நடந்து வருவதாகவும், முழுமையான தகவல்கள் விசாரணைக்கு பிறகே தெரியவரும் என கூறினார்.

அப்போது கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விவேகானந்தன், சங்கு, கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி, டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் கபிலன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்