வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து தம்பதியை கடத்தி ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய பெண் உள்பட 9 பேர் கைது

வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.5 லட்சம் கேட்டு தம்பதியை கடத்தி மிரட்டிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-02-09 21:08 GMT

பேரையூர்,

வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து ரூ.5 லட்சம் கேட்டு தம்பதியை கடத்தி மிரட்டிய 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடத்தல்

மதுரை டி.வி.எஸ். நகரை சேர்ந்தவர் சுப்பையா (வயது 57). இவர் கப்பலூர் பகுதியில் மில் ஒன்றில் மேலாளராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கிருஷ்ணவேணி நிலையூரில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் டி.கல்லுப்பட்டி அருகே உள்ள கவுண்டன்பட்டியில் தோட்டம் வாங்கி விவசாயம் செய்து வருகிறார். மேலும் அங்கு நவகிரக கோவில் வைத்து வழிபாடு செய்து வருகிறார். கடந்த 5-ந் தேதி கோவிலில் இருந்த போது, 2 கார்களில் 5-க்கும் மேற்பட்டவர்கள் வந்தனர். இவர்கள், சுப்பையாவிடம் நாங்கள் வருமான வரித்துறை அதிகாரிகள், அருகில் உள்ள காரில் வருமானவரித்துறை கமிஷனர் உள்ளார். அவரை நீங்கள் பார்க்க வேண்டும் என்று கூறினர்.

பின்னர் சுப்பையாவையும் அவரது மனைவியையும் காரில் கடத்தி உசிலம்பட்டி விலக்கு பகுதிக்கு சென்றனர். அங்கு ரூ.5 லட்சம் கொடுத்தால் இருவரையும் விடுவித்து விடுவதாக கூறி மிரட்டினர். அதற்கு சுப்பையா உங்களுடைய அடையாள அட்டை காட்டுங்கள் என்று கூறினார். எதற்காக அடையாள அட்டையை காட்ட வேண்டும் என்று கூறி இருவரையும் அதே இடத்தில் இறக்கி விட்டு சென்று விட்டனர்.

9 பேர் கைது

இது குறித்து சுப்பையா டி.கல்லுப்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 5 பேரையும் தேடி வந்தனர். மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவப்பிரசாத் உத்தரவின் பேரில் திருமங்கலம் துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தகுமார், கல்லுப்பட்டி இன்ஸ்பெக்டர் பத்மநாபன் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இதில் மதுரையை சேர்ந்த சாந்தி(45), முருகன்(42), சபரி(32), புகழ்ஹரிஸ்(24), ஈஷாக் அகமது(45) முகமது ஜாகிர் உசேன் (42), பாலமுருகன் (56), தினேஷ்குமார் (29), ரிஷி குமார் (22) ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், சுப்பையாவின் நண்பர் கார்த்திகேயன். இவரது வீட்டில் சாந்தி வேலை செய்துள்ளார். முருகன் சாந்தியிடம் பண தேவை என்று கூறியுள்ளார். அதற்கு சாந்தி, சுப்பையா வசதியானவர் நீங்கள் வருமானவரித்துறை அதிகாரிகள் போல் நடித்து சுப்பையாவிடம் பணம் பெறலாம் என்று கூறியுள்ளார்.

இதையடுத்து 9 பேரும் கவுண்டன்பட்டிக்கு வந்து சுப்பையா, அவரது மனைவியை காரில் கடத்தியதும் தெரியவந்தது. மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்