சென்னை பெருநகர் குடிநீர் வாரியத்தில் ரூ.201 கோடியில் 9 புதிய திட்டப்பணிகள் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியத்தில் ரூ.201 கோடி மதிப்பிலான 9 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-05-13 08:05 GMT

சென்னையில் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று அமைப்புகளை திட்டமிட்டு, அபிவிருத்தி செய்து முறைப்படுத்துவது மற்றும் அதைச் சார்ந்த அனைத்துத் தேவைகளுக்காகவும் சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் உருவாக்கப்பட்டது. மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றுதல், நீர் ஆதாரங்களை பெருக்குதல், குடிநீர் கட்டமைப்பை வலுப்படுத்துதல், நகர்ப்புற நீர்நிலைகளை புனரமைத்தல் மற்றும் மீட்டெடுத்தல் போன்ற பணிகளை சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் ஆற்றி வருகிறது.

அந்த வகையில், கொடுங்கையூரில் நாளொன்றுக்கு 120 மில்லியன் லிட்டர் கொள்ளளவு திறன் கொண்ட தொடர் தொகுதி உலை முறையில் 2-ம் நிலை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம்; அம்பத்தூர் மண்டலம், வார்டு-89 மற்றும் வார்டு-92-ல் முகப்பேர் சாலையில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் புதிய பாதாள சாக்கடை திட்டம் அமைக்கும் வகையில் கழிவுநீர் குழாய் விரிவாக்கம் செய்யும் பணி;

அம்பத்தூர் மண்டலம் வார்டு 93-ல் பாடிக்குப்பம் கால்வாயில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்காக கழிவுநீர் உந்துநிலையம் அமைத்தல் மற்றும் கழிவுநீர் உந்துகுழாய் அமைக்கும் பணி; நெசப்பாக்கத்தில் நாளொன்றுக்கு 50 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட தொடர் தொகுதி முறை புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம்;

எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் அடையாறு ஆற்றில் நேரடியாக கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்காக கோடம்பாக்கம் மண்டலம், எம்.ஜி.ஆர் நகர் கால்வாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பு பணிகள்; வளசரவாக்கம் மண்டலம், நெற்குன்றம் பாதாள சாக்கடை திட்டத்தின் கீழ், வள்ளியம்மை நகர் மற்றும் என்.டி.பட்டேல் ரோடு ஆகிய பகுதிகளுக்கான கழிவுநீர் குழாய்கள், கழிவுநீர் விசைக்குழாய்கள் மற்றும் கழிவுநீரிறைக்கும் நிலையம் அமைக்கும் திட்டம்;

வளசரவாக்கம் மண்டலம் வார்டு 149 ராமகிருஷ்ணாநகர் பகுதியில் 24 மணி நேரமும் சீரான குடிநீர் விநியோகிக்கும் திட்டம்; போரூர் வார்டு எண் 151 மற்றும் 153-க்கு உட்பட்ட பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக விரிவான பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம்; வளசரவாக்கம் ராமாபுரம் தமிழ்நகர் மற்றும் ஆலங்குளம் பகுதிகளுக்கு விரிவான பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம்;

ஆலந்தூர் மண்டலம் வார்டு 157-ல் மணப்பாக்கம் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டம்; மணப்பாக்கம் ரிவர்வியு காலனி பகுதியில் விரிவான பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம்; வார்டு 158 நந்தம்பாக்கம் பகுதியில் அடையாறு ஆற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுப்பதற்காக கழிவுநீர் உந்து நிலையம் மற்றும் கழிவுநீர் உந்து குழாய் அமைக்கும் பணிகள்;

பெருங்குடி மண்டலம் உத்தண்டி பகுதி மக்களின் பயன்பாட்டிற்கான விரிவான குடிநீர் வழங்கும் திட்டம்; சோழிங்கநல்லூர் மண்டலம், ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதியில் விரிவான குடிநீர் வழங்கும் திட்டம் என மொத்தம் ரூ.561.26 கோடி செலவிலான சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 14 முடிவுற்ற திட்டப் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் திறந்து வைத்தார்.

ராயபுரம் மண்டலம், தண்டையார்பேட்டையில் கழிவுநீர் உந்து குழாய்கள் அமைக்கும் பணிகள்; ஆர்.கே. நகர் மண்டலம் தண்டையார்பேட்டையில் கழிவுநீர் உந்துகுழாய்கள் அமைக்கும் பணிகள்; அம்பத்தூர் மண்டலம் வார்டு 84 படவட்டம்மன் தொழிற்பேட்டையில் உள்ள விடுபட்ட தெருக்கள், வார்டு 85 சிவானந்தா நகரில் விடுபட்ட தெருக்கள்; வார்டு 85 மற்றும் 86 எம்.கே.பி நகர் மற்றும் அன்னை சத்யாநகர் ஆகிய இடங்களில் விடுபட்ட தெருக்கள் ஆகியவற்றில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டங்கள்;

கோடம்பாக்கம் மண்டலம் வார்டு 133, 134 மற்றும் 135 அசோக் நகர், கோடம்பாக்கம், மேற்கு மாம்பலம் பகுதிகளில் கழிவுநீர் குழாய்களை விரிவாக்கும் திட்டம்; வார்டு137 சூளைப்பள்ளம் பகுதிக்கு பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம்; அடையாறு மண்டலம் வார்டு 168 சிட்கோ நகரில் கழிவுநீர் உந்துகுழாய் அமைக்கும் திட்டம்; அடையாறு மண்டலம் வார்டு 168 ஆலந்தூர் ரோடு பகுதிக்கு பாதாள சாக்கடை அமைக்கும் திட்டம்;

சோழிங்கநல்லூர் மண்டலம் வார்டு 200 செம்மஞ்சேரி பகுதிக்கு ஒருங்கிணைந்த குடிநீர் வழங்கல் திட்டம்; கோடம்பாக்கம் மண்டலம் வார்டு136, 140, 141 மற்றும் 142 தியாகராயநகர், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் பகுதிகளில் கழிவுநீர் குழாய்களை விரிவாக்கும் திட்டம் என மொத்தம் ரூ.201 கோடி செலவிலான சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் 9 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்