ரூ.9¾ லட்சம் உரியவர்களிடம் ஒப்படைப்பு

நாகை மாவட்டத்தில் பல்வேறு சைபர் குற்றங்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து மீட்ட ரூ.9¾ லட்சத்தை உரியவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

Update: 2023-04-10 18:45 GMT


நாகை மாவட்டத்தில் பல்வேறு சைபர் குற்றங்களில் ஈடுபட்டவர்களிடமிருந்து மீட்ட ரூ.9¾ லட்சத்தை உரியவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்.

இணையவழியில் மோசடி

நாகை மாவட்டம் முழுவதும் பல்வேறு சைபர் கிரைம் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் இருந்து பணத்தை மீட்டு அதை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. நாகையை அடுத்த சிக்கல் பகுதியை சேர்ந்த திவ்யா என்பவரிடம் லைப் இன்சூரன்ஸ் கம்பெனியில் இருந்து பேசுவதாக கூறி ரூ.80 ஆயிரத்து 222 பணத்தை இணையவழியில் மோசடி செய்துள்ளனர்.

அதேபோல் தலைஞாயிறு பகுதியை சேர்ந்த உதயகுமார் என்பவரிடம் வாட்ஸ்அப் மூலமாக தொடர்பு கொண்ட அடையாளம்தெரியாத நபர் சுவிட்சர்லாந்து நாட்டில் மரைன் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தையும், தெற்கு பொய்கை நல்லூர் பகுதியை சேர்ந்த பாலச்சந்திரன் என்பவரிடம் வேலைவாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சத்து 98 ஆயிரத்து 492-யும், நாகை கீச்சாங்குப்பம் பகுதியை சேர்ந்த கலைவாணனிடம் ஸ்டேட் பேங்க் மேனேஜர் பேசுவதாக கூறி, லிங்கை அனுப்பி அதன்மூலம் ரூ.2 லட்சத்து 44 ஆயிரத்து 799 பணத்தையும் இணையவழியில் மோசடி செய்துள்ளனர்.

உரியவரிடம் ஒப்படைப்பு

இவ்வாறு மோசடியில் ஈடுபட்டவர்களின் வங்கி கணக்குகளை கோர்ட்டு உத்தரவு பெற்று முடக்கி, பாதிக்கப்பட்டவர்களின் ரூ.9 லட்சத்து 73 ஆயிரத்து 513 பணத்தை மீட்டு, நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் முன்னிலையில் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

குறுகிய காலகட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்ட நாகை மாவட்ட சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகையா, சப்-இன்ஸ்பெக்டர் திருகுமரன் மற்றும் சைபர்கிரைம் போலீசாரை நேரில் அழைத்து பண வெகுமதி வழங்கி பாராட்டினார். மேலும் இது போன்ற சைபர் கிரைம் குற்றங்கள் நடந்தால் 1930 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்