9 பேர் பலியான சம்பவம்: மதுரை ரெயில் தீ விபத்தில் சதித்திட்டம் எதுவும் இல்லை

மதுரை ரெயில் பெட்டி தீ விபத்தில், 9 பேர் பலியான சம்பவத்தில் சதித்திட்டம் எதுவும் இல்லை என்று ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சவுத்ரி திட்டவட்டமாக கூறினார்.

Update: 2023-08-27 23:46 GMT

மதுரை,

மதுரை ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி தீப்பிடித்து எரிந்ததில், உத்தரபிரதேசத்தில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்த 9 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ரெயில் பெட்டியில், கியாஸ் அடுப்பில் 'டீ' போடும்போது சிலிண்டர் வெடித்ததால், இந்த விபத்து நடந்து உள்ளது.

இந்த விபத்து குறித்து தென்மண்டலங்களுக்கான ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி நேற்று மதுரை ரெயில் நிலையத்தில் நேரடி விசாரணை நடத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கைது நடவடிக்கை

மதுரையில் நடந்த ரெயில் பெட்டி தீ விபத்து குறித்து உரிய முறையில் விசாரணை நடந்து வருகிறது. இது குறித்த முழுமையான அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும். எங்களது முதல்கட்ட விசாரணையில், பெட்டியில் சிலிண்டர் அடுப்பு மூலம் தேநீர் போடும் போதுதான் விபத்து நடந்துள்ளது தெரியவந்துள்ளது.

தடை செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தியவர்கள் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து விசாரணை முடிவில் தெரியவரும். இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது போலீசார் கைது நடவடிக்கை எடுப்பார்கள்.

சதித்திட்டம் இல்லை

இந்த விபத்தில் காயம் அடைந்து சிகிச்சையில் உள்ளவர்களை சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டி இருப்பதால் அவர்களிடம் விரைவாக விசாரணை நடத்தி அனுப்பி வைத்து உள்ளோம்.

சுற்றுலா ரெயில் பெட்டிகள், பயணிகளுக்கான ரெயில் பெட்டிகளில் இனி வரும் காலங்களில் இது போல் விபத்து நடக்காமல் இருக்க கடுமையான விதிமுறைகள் வகுக்கப்படும். இந்த விபத்து தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில் சதித்திட்டம் எதுவும் இல்லை என தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விமானம் மூலம்...

இதற்கிடையே இறந்த 9 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் 3 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து உடல்கள் விமானம் மூலமாக லக்னோ கொண்டு செல்லப்பட்டது.

மாயமான 5 பேர் சிக்கினர்

இதற்கிடையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 8 பேர் உள்ளிட்ட 28 பேர் நேற்று மதுரையில் இருந்து விமானம் மூலம் லக்னோவிற்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் சிறப்பு ரெயிலில் மொத்தம் 63 பேர் வந்ததாக பதிவேடுகள் மூலம் தெரியவந்துள்ளது. அதில் பலியானவர்கள், சிகிச்சை பெறுபவர்கள், ஊர் திரும்பியவர்கள் ஆகியோரை கணக்கெடுத்தபோது 5 பேர் மாயமானது தெரிய வந்தது. அவர்களை ரெயில்வே போலீசார் தேடி வந்தனர்.

மாயமான அவர்கள் 5 பேரையும் போலீசார் நேற்று பிடித்தனர். அதில் 2 பேர் சமையல் ஊழியர்கள் என்பது தெரியவந்தது, அவர்களிடம் விபத்து குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தின் போது இவர்கள் எங்கு இருந்தார்கள். விபத்துக்கும், இவர்களும் தொடர்பு உள்ளதா? என்று பல்வேறு கோணத்தில் போலீசார் தங்களின் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்