கோடநாடு பங்களாவில் இருந்து கைப்பற்றப்பட்ட 9 பொருட்களை ஊட்டி கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைப்பு

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், எஸ்டேட் பங்களாவில் இருந்து சி.பி.சி.ஐ.டி.போலீசாரால் புதிதாக 9 பொருட்கள் கைப்பற்றப்பட்டு ஊட்டி கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.;

Update: 2023-07-12 19:00 GMT


ஊட்டி


கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், எஸ்டேட் பங்களாவில் இருந்து சி.பி.சி.ஐ.டி.போலீசாரால் புதிதாக 9 பொருட்கள் கைப்பற்றப்பட்டு ஊட்டி கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.


கோடநாடு கொலை வழக்கு


நீலகிரி மாவட்டம், கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 6 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வருகிறது.


இந்தநிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக விசாரணை தீவிரமடைந்துள்ளது.


இந்த நிலையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கனகராஜ் மற்றும் அவரது சகோதரர் தனபால் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது. இதில் 8 செல்போன்களில் பதிவாகியுள்ள தகவல்களை ஆய்வு செய்ய கோவையில் உள்ள ஆய்வகத்திற்கு செல்போன்களை அனுப்ப வலியுறுத்தி சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஊட்டியில் உள்ள மாவட்ட அமர்வு நீதிபதியிடம் நேற்று முன்தினம் மனுத்தாக்கல் செய்தனர்.


இதைத்தொடர்ந்து கோடநாடு பங்களாவில் இருந்து கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக புதிதாக 9 பொருட்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைப்பற்றி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த பொருட்களை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் ஒப்படைத்தனர்.


9 பொருட்கள் ஒப்படைப்பு


அதன்படி கோடநாடு பங்களாவின் 2 வரைபடங்கள், 3 புகைப்படங்கள் மற்றும் 20 அடி அகலம் 30 அடி நீளத்தில் கட்டபட்டுள்ள ஜெயலலிதாவின் அறை மற்றும் 20 அடி அகலம் 25 அடி நீளம் கொண்ட சசிகலாவின் அறை, ஸ்டோர் அறை ஆகியவற்றில் இருந்து சில பொருட்கள் என மொத்தம் 9 பொருட்களை கைப்பற்றி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.


மேலும் கோடநாடு மேலாளர் நடராஜன் மற்றும் வழக்கில் சாட்சியாளராக சேர்க்கப்பட்டு உள்ள முனிராஜ் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Tags:    

மேலும் செய்திகள்