விஷம் வைத்து 9 நாய்கள் சாகடிப்பு; விவசாயி கைது
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் விஷம் வைத்து 9 நாய்களை சாகடித்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
நெல்லை மேலப்பாளையம் பகுதியில் விஷம் வைத்து 9 நாய்களை சாகடித்த விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
நாய்கள் சாகடிப்பு
நெல்லை மேலப்பாளையம் அருகே உள்ள கருங்குளம் சிவன்கோவில் பகுதி, மாநகராட்சி பள்ளி அருகே, கருங்குளம் வாய்க்கால் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலையில் நாய்கள் சில இறந்து கிடந்தன. இதனை அறிந்த பொதுமக்கள் மேலப்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையறிந்த போலீசார் சம்பவ இடங்களுக்கு சென்று பார்வையிட்டனர். அதில் மொத்தம் 9 நாய்கள் உயிர் இழந்தது தெரியவந்தது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த நாய்கள் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டது தெரியவந்தது.
விவசாயி கைது
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மேலப்பாளையம் கருங்குளத்தை சேர்ந்த விவசாயி செல்வம் (வயது 47) என்பவர் விஷம் வைத்து நாய்களை சாகடித்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் செல்வத்தை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், செல்வம் ஆடுகள் வளர்த்து வருகிறார். அந்த ஆடுகளை நாய்கள் கடித்துவிடக்கூடாது என்பதற்காக சாப்பாட்டில் விஷம் வைத்து நாய்களை சாகடித்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, செல்வத்தை கைது செய்தனர்.