வடநெற்குணத்தில்8-ம் நூற்றாண்டு அய்யனார் சிற்பம் கண்டுபிடிப்பு

வடநெற்குணம் கிராமத்தில் 8-ம் நூற்றாண்டு அய்யனார் சிற்பம் கல்வெட்டுடன் கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2023-09-20 18:45 GMT

அய்யனார் சிற்பம் கண்டுபிடிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஊர்களில் காணப்படும் அய்யனார் சிற்பங்களை பற்றி கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவன், ஆசிவக ஆய்வாளர் சுரேந்தர் ஆகியோர் ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆய்வாளர் உத்ராடம் கொடுத்த தகவலின்படி மரக்காணம் தாலுகா வடநெற்குணம் கிராமத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அங்கு 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பல்லவர் கால கொற்றவை, விஷ்ணு, அய்யனார் சிற்பங்களும், 15-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகல் ஒன்றும் கண்டறியப்பட்டது. ஏற்கனவே ஆய்வாளர் உத்ராடத்தால் கண்டறியப்பட்ட அய்யனார் சிற்பத்தில் தற்போது 6 வரிகளில் உள்ள கல்வெட்டு ஒன்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. 3¾ அடி நீளமும், 3 அடி அகலத்திலும் அய்யனார் சிற்பம் அமைந்துள்ளது. சிற்பத்தின் வலதுபுறத்தில் கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது.

இந்த கல்வெட்டு செய்தியில், குடிப்பள்ளி தாண்டவாரி என்பவர் இந்த அய்யனார் படிமத்தை சேவித்தார் என்றுள்ளது. இதுவரை தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அய்யனார் சிற்பங்களில் 6 சிற்பங்களில் மட்டுமே கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. அதில் விழுப்புரம் வீரராகவன், 3 சிற்பங்களிலும், ஸ்ரீதரன், கரு.ராசேந்திரன், ரவிக்குமார் ஆகியோர் தலா ஒவ்வொரு சிற்பத்திலும் கல்வெட்டை கண்டறிந்துள்ளனர். மாணவர்கள் முத்துகிருஷ்ணன், சதீஷ் இருவரும் மாசிச்செட்டி அய்யனாரின் இருப்பிடத்துக்கு வழிகாட்டி உதவினர்.

நடுகல்

மேலும் 400 ஆண்டுகளுக்கு முற்பட்ட நடுகல் ஒன்று அதே கிராமத்தில் உள்ள செல்வம் என்பவரின் நிலத்தில் கண்டறியப்பட்டது. இந்த நடுகல் வீரன் இடது கரத்தில் வில்லேந்தியும், வலது கரத்தில் அம்பு கற்றையையும் ஏந்தியுள்ளான். வீரனின் கால்களுக்கு அருகே கல்வெட்டு வெட்டப்பட்டுள்ளது. அந்த கல்வெட்டு செய்தியில் சடையபெரும பொன்ந வா (டி) பட்டான்

என கல்வெட்டு வரிகள் உள்ளன. நடுகல்லில் உள்ள வீரனின் பெயர் சடையபெருமான் பொன்ந. இவன் போரில் ஈடுபட்டு உயிரிழந்துள்ளான். இவனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இதுவாகும். இவ்வீரன் சிற்பத்தை செல்லன் குடும்பத்தினர் தலைமுறை, தலைமுறையாக வணங்கி வருகின்றனர். அதோடு வடநெற்குணத்தில் பல்லவர் கால கொற்றவை, விஷ்ணு, அய்யனார் சிற்பங்களை இவ்வூர் மக்கள் வழிபட்டு வருகிறார்கள். எழுத்து பொறிப்புள்ள மாசிச்செட்டி அய்யனாரப்பனுக்கு ஆடி மாதத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக திருவிழா கொண்டாடி அருளை பெற்று மகிழ்கிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்