அக்னி நட்சத்திரத்தின் முதல் நாளில் 89.66 டிகிரி வெயில்

திண்டுக்கல்லில் அக்னி நட்சத்திரத்தின் முதல் நாளில் 89.66 டிகிரி வெயில் கொளுத்தியது.

Update: 2023-05-04 13:59 GMT

கோடைவெயில்

தமிழகத்தில் கோடைவெயில் வாட்டி வதைக்கும் மாவட்டங்களில் திண்டுக்கல்லும் ஒன்றாகும். திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே கோடைவெயில் சுட்டெரிக்க தொடங்கி விட்டது. பின்னர் ஏப்ரல் மாதம் பிறந்ததும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. ஒருசில நாட்களில் 100 டிகிரி வரை வெயில் கொளுத்தியது.

காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சூரியனின் கதிர்கள் வெப்பத்தை உமிழ்கின்றன. அதிலும் மதிய வேளையில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெயில் கோரத்தாண்டவம் ஆடியது. மக்கள் தினமும் வியர்வையில் குளித்து வந்தனர். இளநீர், கூழ், குளிர்பானங்கள் என மக்கள் பருகினாலும் கோடைவெப்பத்தில் இருந்து தப்பிக்க முடியவில்லை.

அக்னி நட்சத்திரம்

பகலில் மட்டுமின்றி இரவிலும் வெப்பத்தின் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் நிம்மதியாக தூங்க முடியாமல் சிரமப்பட்டனர். இதற்கிடையே ஏப்ரல் மாதத்தின் இறுதியில் கோடைமழை பெய்யத் தொடங்கியது. இதை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இதனால் கோடைவெப்பத்தில் இருந்து மீண்டதாக நினைத்து மக்கள் நிம்மதி அடைந்தனர். இதற்கிடையே நேற்று அக்னி நட்சத்திரம் தொடங்கியது. நேற்றும் வழக்கம் போல் காலையில் வெளியில் கொளுத்தியது. எனினும் அவ்வப்போது வானில் மேகங்கள் திரண்டதால் வெப்பம் குறைவாகவே காணப்பட்டது. எனினும் நேற்றைய தினம் 89.66 டிகிரி வெயில் சுட்டெரித்தது.

இதனால் பெண்கள் குடையை பிடித்து கொண்டும், தலையை துணியால் மூடிக்கொண்டும் சென்றனர். அதேநேரம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வந்த நிலையில் அக்னி நட்சத்திரத்தின் முதல் நாளிலேயே வெயில் கொளுத்தியதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்