எருது விடும் விழாவில் 89 காளைகள் பங்கேற்பு
வாணியம்பாடிைய அடுத்த வெள்ளக்குட்டை கிராமத்தில் நடந்த எருது விடும் விழாவில் 89 காளைகள் பங்கேற்றன. முதல் பரிசாக ரூ.1 லட்சம் வழங்கப்பட்டது.
எருது விடும் விழா
வாணியம்பாடி அருகே உள்ள வெள்ளக்குட்டை கிராமத்தில் எருது விடும் விழா நடைபெற்றது. விழாவுக்கு ஆசிரியர் வா.கோதண்டபாணி தலைமை தாங்கினார். கோனேரி ஜி. ராமமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் டி.கவிதா திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வாணியம்பாடி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.செந்தில்குமார் கலந்து கொண்டு விழாவை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், ஆந்திர மாநிலம் சித்தூர், குப்பம் ஆகிய பகுதிகளில் இருந்தும் சுமார் 89 காளைகள் பங்கேற்றன.
முன்னதாக எருதுகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்து விடப்பட்டு 3 சுற்றுகள் ஓடின. குறைந்த நேரத்தில் வேகமாக ஓடி இலக்கை அடைந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ரூ.1 லட்சம் பரிசு
தாசியப்பனூர் பகுதியை சேர்ந்த சுமித்ரா என்பவரது காளைக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சமும், நிம்மியம்பட்டு பகுதியை சேர்ந்த மாதேஷ் என்பவரின் காளைக்கு 2-வது பரிசாக ரூ.80 ஆயிரமும், 3-ம் பரிசாக இருணாம்பட்டு பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரது காளைக்கு ரூ.65 ஆயிரமும் வழங்கப்பட்டது. மொத்தம் 42 பரிசுகள்வழங்கப்பட்டது. வேலூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சி.ஞானசேகரன் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் பிரேமலதா, தலைமையில் வருவாய்துறையினர், ஆலங்காயம் வட்டார மருத்துவ அலுவலர் .பசுபதி தலைமையில் மருத்துவ குழுவும், மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ், வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் சுமார் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.