தூத்துக்குடி மாவட்டத்தில் 88 பேரின் வங்கி கணக்கு முடக்கம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபட்ட 88 பேரின் வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-06 11:37 GMT

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை, கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களின் உறவினர் 88 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளதாக, போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

ஆலோசனை கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனை சம்பந்தமாக தீவிர நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் சட்ட விரோதமான போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். இதில் நடவடிக்கை எடுக்கத் தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். நடப்பு ஆண்டில் இதுவரை கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்ததாக 74 வழக்குகள் பதிவு செய்து, 115 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.7 லட்சத்து 74 ஆயிரத்து 500 மதிப்புள்ள 77 ½ கிலோ கஞ்சா மற்றும் ரொக்கப்பணம் ரூ.1 லட்சத்து 43 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

வங்கி கணக்கு முடக்கம்

மேலும் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 21 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. அதே போன்று 55 கஞ்சா வழக்குகளில் ஈடுபட்டவர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் உட்பட மொத்தம் 88 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் 54 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. நடப்பு ஆண்டில் இதுவரை கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 27 பேர் உட்பட மொத்தம் 110 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் புகையிலை போன்ற போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனை, ரவுடியிசம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் முற்றிலும் ஒழிக்கப்படும். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்படுவார்கள் என்று கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், தூத்துக்குடி ஊரக உதவி போலீஸ் சூப்பிரண்டு சந்தீஸ், விளாத்திக்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்