தமிழகத்தில் 876 கிராம செயலகம் கட்டப்படும்

தமிழகத்தில் 876 கிராம செயலகம் கட்டப்படும்

Update: 2022-07-08 19:54 GMT

தமிழகத்தில் 876 கிராம செயலகம் கட்டப்படும் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

ஆய்வுக்கூட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வரவேற்றார்.

கூட்டத்திற்கு பிறகு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் அறிவுரையை ஏற்று தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசு துறை சார்ந்த உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

எளிமை

வருவாய்த்துறை செயல்பாடுகளை இன்னும் வேகப்படுத்த வேண்டும். இன்னும் எளிமைப்படுத்த வேண்டும். தாலுகா அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்களுக்கு வந்து பொதுமக்கள் தெரிவிக்கும் கோரிக்கைகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் அலுவலர்கள் முடித்து கொடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்கும், பிற மாவட்டங்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் நிலப்பிரச்சினை, குத்தகை பிரச்சினை, கோவில், மடத்து நிலங்கள் தொடர்பாக பிரச்சினைகள் அதிகம் உள்ளன. கோவில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா கேட்டு பல கோரிக்கைகள் வந்துள்ளன. இது தொடர்பாக முதல்-அமைச்சரிடம் கலந்து பேசி தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.

காலக்கெடு

இந்த ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு செலுத்துவதற்கான காலக்கெடு வருகிற 30-ந் தேதியோடு முடிவடைகிறது. இதனால் இன்னும் 4 தினங்களில் விவசாயிகள் கேட்கும் அடங்கள் உள்ளிட்ட சான்றிதழ்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கிராமங்களில் கிராம நிர்வாக அலுவலகங்கள் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. ஊராட்சித்துறை மற்றும் வருவாய்த்துறை இணைந்து, தமிழகத்தில் முதற்கட்டமாக இந்த ஆண்டு 876 கிராம செயலகம் கட்டப்பட உள்ளது. ஊராட்சி அலுவலகங்கள், கூட்ட அரங்கம், கிராம நிர்வாக அலுவலகங்கள் இந்த கிராம செயலகத்தில் இருக்கும்.

சாதிச்சான்று, வருவாய்சான்று, இருப்பிட சான்றிதழ், முதல் பட்டதாரி சான்று, வாரிசு சான்று, ஆதரவற்றோர் சான்று உள்ளிட்ட சான்றுகள் வழங்க ஒரு கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் தற்போது திறக்கப்பட்ட நிலையில், மாணவர்களுக்கு தேவையான சாதிச்சான்று, வருவாய், இருப்பிட சான்றிதழ்களை 2 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.

காலிப்பணியிடங்கள்

கடந்த 10 ஆண்டுகளில் வி.ஏ.ஓ. காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. டி.என்.பி.எஸ்.சி. தேர்வு மூலம் 2 அல்லது 3 மாதங்களுக்கு வி.ஏ.ஓ. பணியிடங்கள் நிரப்பப்படும். சர்வேயர்கள் 800 பேர் நியமிக்கப்பட உள்ளனர். மேலும் வி.ஏ.ஓ.க்களும் நிலத்தை அளக்க அனுமதி அளிக்கப்பட்டு, சர்வே செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. வருவாய்த்துறை சிறப்பாக நடந்தால் தான் அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

தமிழகம் முழுவதும் இ-சேவை மையங்களில் சர்வர் பிரச்சினை உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில் சர்வரில் சேமிப்பை அதிகப்படுத்தவும், சாப்ட்வேர்களை அப்டேட் செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. இ-சேவை மையங்களை அதிகப்படுத்த உள்ளோம். ஒவ்வொரு எம்.எல்.ஏ. அலுவலகங்களிலும் இ-சேவை மையங்கள் அமைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இன்னும் 2 மாதங்களில் இ-சேவை மையமானது எம்.எல்.ஏ. அலுவலகங்களிலும் திறக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அரசு கொறடா கோவி.செழியன், எம்.பி.க்கள் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், செ.ராமலிங்கம், சு.கல்யாணசுந்தரம், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், சாக்கோட்டை அன்பழகன், அண்ணாதுரை, பூண்டி கலைவாணன், ஜவாஹிருல்லா, ராஜகுமார், மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, அரசு முதன்மை செயலாளர் குமார்ஜெயந்த் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்