850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நலம் வளர் நாயகி உடனுறை அங்கநாதீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
திருப்பத்தூர் தாலுகா மடவாளம் கிராமத்தில் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நலம் வளர் நாயகி உடனுறை அங்கநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேகம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
திருப்பத்தூர் தாலுகா மடவாளம் கிராமத்தில் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த நலம் வளர் நாயகி உடனுறை அங்கநாதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இதன் கும்பாபிஷேகம் வருகிற 12-ந் தேதி நடக்கிறது.
தொன்மையான சிவாலயம்
தொன்மையான 10 சிவாலயங்களில் ஒன்றாக விளங்கும் இந்த அங்கநாதீஸ்வரர் கோவிலின் சிறப்புகளை காண்போம்.
சுமார் 850 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவில் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயத்தை தலைமை இடமாகக் கொண்டு அப்போதைய சிற்றரசன் அங்கநாதன் என்பவரால் கட்டப்பட்டதாகவும், அவர் கட்டிய இந்த கோவில் மூலவர் அங்கநாதீஸ்வரர் என்னும் திருப்பெயரால் அழைக்கப்படுவதாகவும், தன்னை தேடி வரும் பக்தர்களுக்கு அங்கங்களில் ஏற்படுகின்ற அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கக் கூடியவர் எனவும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றது. ஸ்தலவிருட்சமாக வில்வமரம் உள்ளது.
அங்கநாதீஸ்வரர் கோவில் மூலஸ்தானத்தில் உள்ள சிவலிங்கம் அங்கம் பிளவுபட்டு காணப்படுகிறது. இந்த சிவலிங்கத்தை கற்களைக் கொண்டு தட்டினால் பல விதமான ஓசைகள் வருகிறது. இந்த சிவலிங்கம் சுயமாக தோன்றி ஆர்வ திருமேனியாக காட்சியளிக்கிறது. கோவிலில் உள்ள உடனுறை அம்பிகை நலம் வளர் நாயகியை கர்ப்பிணி தாய்மார்கள் தரிசனம் செய்தால் சுகப்பிரசவத்தில் குழந்தை பிறப்பதாக ஐதீகம். இந்த கோவிலில் தொடுமுக கடவுளாக தட்சிணாமூர்த்தி 4 அடி உயரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இந்தக் கோவில் முன்பு 21 அடி உயரம் கொண்ட பஞ்சலோகத்தால் ஆன கொடிமரம் உள்ளது.
61 அடி உயர ராஜகோபுரம்
கோவில் உள்ளே விநாயகர், நார்தன விநாயகர், செல்வவிநாயகர், வள்ளி தெய்வானை உடன் முருகன், நந்தி ஆகியவற்றுக்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன. அடிஅண்ணாமலையார், பிரம்மா, நடராஜர், துர்க்கை, ஆஞ்சநேயர் ஆகிய சாமிகளுக்கு தனி கோஷ்டாங்கள் சன்னதிகளாக உள்ளது. 61 அடி உயரம் கொண்ட ராஜகோபுரம் கற்கள் மற்றும் சுண்ணாம்புகளால் கட்டப்பட்டு கம்பீரமாக விளங்குகிறது. அங்கநாதீஸ்வரருக்கு நெய்வேத்தியம் செய்ய அருகில் உள்ள மடப்பள்ளியில் காலை, மாலை, இரவு என அனைத்து வேளைகளிலும் பிரசாதங்கள் மற்றும் உணவு சமைத்து வந்துள்ளனர். அந்தப்பகுதி தற்போது மாடப்பள்ளி கிராமமாக மாறி உள்ளது.
விழாக்கள்
கோவிலில் சங்கடஹர சதுர்த்தி, கிருத்திகை ஆகிய நாட்களில் நடராஜர் அபிஷேகம், ஈஸ்வரர் அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும் அஷ்டமி திதியில் பைரவருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. இந்த கோவிலின் முக்கிய விழாவாக பிரம்மோற்சவ விழா 14 நாட்கள் நடைபெறுகிறது. இதில் கொடியேற்றத்துடன் தொடங்கி முக்கிய நிகழ்வாக சாமி திருக்கல்யாணம் மற்றும் இரண்டு குதிரைகள் பூட்டிய 32 அடி உயர தேர் முக்கிய தெருக்களில் வீதி உலா வந்து சாமி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். திருக்கல்யாணத்தில் சாமிக்கு அணிவிக்கப்பட்ட பூமாலை திருமணம் ஆகாதவர்களுக்கு அளிக்கப்பட்டால் அவர்களுக்கு திருமணம் நடைபெறும் என்பதும் ஐதீகம். மேலும் கார்த்திகை சோமவார அபிஷேகம் ஒவ்வொரு மாதமும் திருவாதிரை நட்சத்திரத்தில் நடராஜருக்கு நடக்கிறது. மேலும் தை மாதம் முதல் நாள், மாசி மாதம் மகா சிவராத்திரி அன்று 6 கால பூஜை நடைபெற்று விடிய விடிய சாமி பக்தர்களுக்கு காட்சியளிப்பார். ஐப்பசி மாதம் கோவிலில் உள்ள முருகருக்கு கந்த சஷ்டி கவசம் பாடப்பட்டு வருகிறது. முக்கிய நிகழ்வுகளில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
கும்பாபிஷேகம்
இந்த தொன்மையான கோவில் கடந்த 1998-ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த அண்ணா. அண்ணாதுரை தலைமையில் கோவை பேரூர் திருமடத்து சாந்தலிங்க ராமசாமி அடிகளார், மறைந்த சிவனடியார் புரிசை நடராஜன் ஆகியோர் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 24 ஆண்டுகள் கழித்து நல்லதம்பி எம்.எல்.ஏ. தலைமையில் அமைச்சர்கள் சேகர்பாபு, எ.வ.வேலு, சி.என்.அண்ணாதுரை எம்.பி., தேவராஜி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலையில் வருகிற 12-ந் தேதி ராஜகோபுரம் மற்றும் மூலஸ்தானத்தில் உள்ள அங்கநாதீஸ்வரருக்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவில் திருப்பத்தூரில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள மடவாளம் கிராமத்தில் அமைந்து உள்ளது.