கோட்டக்குப்பத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 840 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

கோட்டக்குப்பத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 840 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Update: 2023-06-17 18:45 GMT

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பூராதோப்பு பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக விழுப்புரம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் விஜய்கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அப்பகுதியில் உள்ள கோவிந்தராஜ் என்பவரது வீட்டின் பின்புற பகுதியில் 40 கிலோ எடை கொண்ட 21 சாக்கு மூட்டைகளில் 840 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பறிமுதல்

விசாரணையில், கோவிந்தராஜூம் அவரது மனைவி பானுமதியும் சேர்ந்து அப்பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதனை வெளிமார்க்கெட்டில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்து விழுப்புரம் நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைத்தனர். மேலும் இதுதொடர்பாக கோவிந்தராஜ், அவரது மனைவி பானுமதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்