ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் சுபமுகூர்த்த தினத்தில் 818 பத்திரங்கள் பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் சுபமுகூர்த்த தினத்தில் 818 பத்திர பதிவுகள் நடந்து உள்ளன.

Update: 2023-08-22 22:21 GMT

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் சுபமுகூர்த்த தினத்தில் 818 பத்திர பதிவுகள் நடந்து உள்ளன.

சொத்து முதலீடு

சொத்துகள் (நிலம்) வாங்குபவர்கள் பெரும்பாலும் சுப தினங்களில் அந்த நிலத்தின் பத்திர பதிவினை செய்வது வழக்கமாக உள்ளது. சொத்துகளின் விலை உயர்வு காரணமாக பலரும் சொத்து வாங்குவதையும், சொத்துகளில் பணம் போடுவதையும் முதலீடாக பார்க்கிறார்கள். எனவே சொத்துகளின் மூலம் மேலும் வருவாய் அதிகரிக்கும் வகையில் அதன் பத்திர பதிவினை சுபமுகூர்த்த நாட்களில் வைத்துக்கொள்கிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை நிறைந்த அமாவாசை தினம், பவுர்ணமி மற்றும் சுபமுகூர்த்த நாட்களில் பத்திர பதிவு அதிகம் நடைபெறும்.

சுபமுகூர்த்தம்

இதுபோல் தமிழகம் முழுவதும் பத்திர பதிவு அலுவலகங்கள் இந்த நாட்களில் கூட்டத்தால் நிரம்பி வழிவது வழக்கமாகும். எனவே சுபநாட்களில் பத்திர பதிவு செய்ய விரும்புபவர்களுக்கு வசதியாக கூடுதல் டோக்கன்கள் வழங்கவும், சுபநாட்கள் விடுமுறை தினத்தில் வருவதாக இருந்தால், அன்றைய தினம் பதிவு செய்ய விரும்புபவர்கள் கூடுதல் கட்டணம் செலுத்தும் திட்டத்தையும் தமிழக பத்திரப்பதிவுத்துறை அறிமுகப்படுத்தி உள்ளது. பொதுவாக ஆடி மாதத்தில் பெரும்பாலான சுப விஷயங்கள் நடைபெறுவதில்லை. இதனால் ஆவணி மாதம் பிறந்தால் சுபநிகழ்வுகளுடன் பத்திர பதிவுகளும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேற்று முன்தினம் ஆவணி மாதத்தில் 2-வது சுபமுகூர்த்த தினமாகும். அதுவும் திங்கட்கிழமை என்பதால் சிறப்பானதாக பார்க்கப்பட்டது. எனவே கூடுதல் டோக்கன்கள் வினியோகம் செய்ய பத்திரப்பதிவுத்துறை அறிவுறுத்தி இருந்தது.

எதிர்பார்ப்பு

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஈரோடு பதிவு மாவட்டம், கோபி பதிவு மாவட்டம் என்று 2 பதிவு மாவட்டங்கள் உள்ளன. ஈரோடு பதிவு மாவட்ட பதிவாளராக அசோகன், கோபி பதிவு மாவட்ட பதிவாளராக பூங்கொடி ஆகியோர் உள்ளனர்.

ஈரோடு பதிவு மாவட்டத்தில் ஈரோடு இணை-1, ஈரோடு இணை -2, சூரம்பட்டி, அவல்பூந்துறை, பெருந்துறை, சிவகிரி, திங்களூர், கொடுமுடி, பவானி, அந்தியூர், அம்மாபேட்டை, சென்னிமலை சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்குகின்றன. கோபி பதிவு மாவட்டத்தில் கோபி இணை-1, கோபி இணை-2, நம்பியூர், புஞ்சைபுளியம்பட்டி, சத்தியமங்கலம், கவுந்தப்பாடி, டி.என்.பாளையம், தாளவாடி ஆகிய சார்பதிவாளர் அலுவலகங்களும் இயங்கி வருகின்றன.

இந்த சார்பதிவாளர் அலுவலகங்களில் தினமும் தலா 100 பத்திர பதிவுகளுக்கு அனுமதி உள்ளது. நேற்று முன்தினம் தலா 150 டோக்கன்கள் வழங்க அனுமதிக்கப்பட்டது. எனவே பத்திர பதிவு செய்ய ஏராளமானவர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

818 பத்திரங்கள் பதிவு

அதன்படி நேற்று முன்தினம் ஈரோடு ரங்கம்பாளையத்தில் சார்பதிவாளர் அலுவலகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இங்கு ஒரே வளாகத்தில் ஈரோடு இணை-1, ஈரோடு இணை-2, சூரம்பட்டி சார்பதிவாளர் அலுவலகங்கள் இயங்குவதால் அதிக நெரிசலாக காணப்பட்டது. நேற்று முன்தினம் மாலை வரை பத்திரப் பதிவு நடந்தது. இங்கு ஒரே நாளில் ஈரோடு 2 சார்பதிவாளர் அலுவலகங்களும் சேர்ந்து 62 பத்திரங்களும், சூரம்பட்டி அலுவலகத்தில் 37 பத்திரங்களும் பதிவு செய்யப்பட்டன.

அவல்பூந்துறை-70, பெருந்துறை-74, சிவகிரி-27, திங்களூர்-21, கொடுமுடி-11, பவானி-51, அந்தியூர்-32, அம்மாபேட்டை-42, சென்னிமலை-38 என ஈரோடு பதிவு மாவட்டத்தில் 486 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன.

கோபி இணை-1 ல் 46, கோபி இணை-2 ல் 26, நம்பியூர்-65, புஞ்சை புளியம்பட்டி -60, சத்தியமங்கலம்-79, கவுந்தப்பாடி-28, டி.என்.பாளையம்-14, தாளவாடி-14 என 332 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டன. இவ்வாறு நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் 818 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்