494 கஞ்சா வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கம்

தென் மண்டலத்தில் 494 கஞ்சா வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி. அஸ்ராகார்க் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-30 21:19 GMT

மதுரை,

தென் மண்டலத்தில் 494 கஞ்சா வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஐ.ஜி. அஸ்ராகார்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

494 வழக்குகள்

தமிழகத்தில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்தும் விதமாக தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுறுத்தலின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கஞ்சா வழக்கில் கைது செய்யப்படும் குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் உள்ள நபர்களின் சொத்துக்கள், வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், தென் மண்டலத்தில் உள்ள 10 மாவட்டங்களில் கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. கஞ்சாக்களை பறிமுதல் செய்வதோடு மட்டுமல்லாமல், குற்றவாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் உள்ளிட்டோரின் வங்கி கணக்குகள் முறைப்படி முடக்கம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கடந்த 2 வாரத்தில் சுமார் 494 வழக்குகளில் 813 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கை

தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், குற்றவாளிகள் மட்டுமின்றி அவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களின் சொத்துக்களும் முடக்கப்படும் என தென் மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் எச்சரித்துள்ளார்.

மதுரையின் நிலை என்ன?

மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கஞ்சா விற்பனை தொடர்பாக ஆஸ்டின்பட்டி போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கில் ரூ.37 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் மற்றும் 3 மோட்டார் சைக்கிள்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுபோல், சேடபட்டி போலீஸ் நிலையத்தில் பதிவான 2 வழக்குகளில் சுமார் ரூ.59 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக, கடந்த 2 வாரங்களில் ஊமச்சிகுளம், மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர் ஆகிய உட்கோட்டங்களில் 114 வழக்குகளில் 191 வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளன. கஞ்சா மொத்த விற்பனையாளர்கள் மட்டுமின்றி சில்லறை விற்பனையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வங்கி கணக்குகள் முடக்கப்படும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்