திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 81.25 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 81.25 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மேலும் மாணவர்களை விட மாணவிகள் அதிகமாக தேர்ச்சி அடைந்தனர்.

Update: 2022-06-20 15:53 GMT

திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் 81.25 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மேலும் மாணவர்களை விட மாணவிகள் அதிகமாக தேர்ச்சி அடைந்தனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு

தமிழகத்தில் கடந்த மாதம் 6-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கி 30-ந்தேதி வரை நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 353 பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கு 115 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

இந்த மையங்களில் 12 ஆயிரத்து 984 மாணவர்கள், 12 ஆயிரத்து 574 மாணவிகள் என மொத்தம் 25 ஆயிரத்து 558 பேர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். இந்த நிலையில் இன்று பொதுத்தேர்வு முடிவு வெளியானது. இதில் திண்டுக்கல் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியவர்களில் 9 ஆயிரத்து 584 மாணவர்கள், 11 ஆயிரத்து 183 மாணவிகள் என மொத்தம் 20 ஆயிரத்து 767 பேர் தேர்ச்சி பெற்றனர்.

81.25 சதவீதம்

அதேநேரம் 3 ஆயிரத்து 400 மாணவர்கள், 1,391 மாணவிகள் என மொத்தம் 4 ஆயிரத்து 791 பேர் தேர்ச்சி பெறவில்லை. இதன்மூலம் மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி விகிதம் 81.25 சதவீதம் ஆகும். மேலும் மாணவர்களை பொறுத்தவரை 73.81 சதவீதமும், மாணவிகள் 88.94 சதவீதமும் தேர்ச்சி பெற்று உள்ளனர். மாணவிகளை விட மாணவர்கள் அதிகமாக தேர்வு எழுதிய நிலையில், மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 அரசு பள்ளிகள் தேர்ச்சி

திண்டுக்கல் மாவட்டத்தில் 152 அரசு பள்ளிகளை சேர்ந்த 4 ஆயிரத்து 929 மாணவர்கள், 5 ஆயிரத்து 185 மாணவிகள் என மொத்தம் 10 ஆயிரத்து 114 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். இவர்களில் 2 ஆயிரத்து 968 மாணவர்கள், 4 ஆயிரத்து 223 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 191 பேர் தேர்ச்சி பெற்றனர். அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 71.10 சதவீதம் ஆகும். மேலும் மாணவர்கள் 60.22 சதவீதமும், மாணவிகள் 81.45 சதவீதமும் தேர்ச்சி பெற்றனர்.

மாற்றுத்திறனாளிகள் 90.48 சதவீதம்

மாவட்டத்தில் பார்வையற்ற மாணவர்கள் 8 பேரும், காது கேளாத மற்றும் வாய்பேச இயலாதவர்கள் 17 பேரும், உடல் பாதித்தவர்கள் 31 பேரும், இதர மாற்றுத்திறனாளிகள் 63 பேரும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதினர். இவர்களில் பார்வையற்றவர்கள் 7 பேரும், காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்கள் 9 பேரும், உடல் பாதித்தவர்கள் 23 பேரும், இதர மாற்றுத்திறனாளிகள் 57 பேரும் தேர்ச்சி பெற்றனர். இதன்மூலம் மாற்றுத்திறனாளி மாணவர்கள் 90.48 சதவீதம் தேர்ச்சி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்