மண்டபத்தில் 800 மீட்டர் தூரம் இருப்புப்பாதை இடமாறுகிறது
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் இருந்து ராமேசுவரம் தீவை இணைப்பதில் கடலுக்குள் அமைந்துள்ள பாம்பன் ரெயில் பாலம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
புதிய பாலம் கட்டும் பணி
அதுபோல் 108 ஆண்டுகளை கடந்து மிகவும் பழமையான பாலம் ஆகிவிட்டதால் அந்த பாலத்தின் அருகிலேயே சுமார் 50 மீட்டர் இடைவெளியில் ரூ.450 கோடி நிதியில் புதிதாக ரெயில் பாலம் கட்டும் பணியானது கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக நடந்து வருகிறது.
கடலுக்குள் 300-க்கும் மேற்பட்ட தூண்கள் அமைத்து கட்டப்பட்டும் புதிய பாலத்தில், இரும்பு கர்டர் பொருத்தப்பட்டு, தண்டவாளங்கள் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
பாம்பன் புதிய ரெயில் பாலத்தின் பணிகளை விரைந்து முடிக்க மத்திய ரெயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன.
பாம்பன் ரெயில் பாலத்தின் நுழைவு பகுதியில் இருந்து மண்டபம் ரெயில் நிலையத்திற்கு இடைப்பட்ட பகுதியில் சுமார் 800 மீட்டர் தூரத்துக்கு பழைய தண்டவாளங்களை முழுமையாக அகற்றும் பணியானதும் நடைபெற்று வருகிறது. ரெயில்வே தண்டவாளக் கம்பிகள் அகற்றப்பட்டு அந்த இடத்திலிருந்து சிலிப்பர் கட்ைடகளும் அகற்றப்பட்டு வருகின்றன.
அதிகாரி விளக்கம்
இதுகுறித்து ஆர்.வி.என்.எல். அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பாம்பன் கடலில் கட்டப்படும் புதிய ரெயில் பாலத்திற்கான தூக்கு பாலத்தில் அமைய உள்ள கர்டருடன் சேர்த்து 100 கர்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. பாலத்தின் நுழைவு பகுதியில் இருந்து புதிய தூக்குப்பாலத்துக்கான தூண்கள் வரை கர்டர் அமைக்கும் பணி முழுமையாகவே முடிவடைந்துவிட்டது.
அடுத்தக்கட்டமாக தூக்குப்பாலம் அமைப்பதற்கான பணி தொடங்க உள்ளது. அதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதற்காக சத்திரக்குடியில் இருந்து தயார் செய்து கொண்டுவரப்பட்டுள்ள உபகரணங்கள் பாம்பன் பகுதியில் இறக்கி வைக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு சில முக்கிய உபகரணங்கள் கொண்டு வரப்பட உள்ளன. அனைத்து உபகரணங்களும் வந்த பின்னர் இந்த உபகரணங்களை ஒன்றிணைக்கும் பணியானது பாம்பன் பகுதியில் வைத்து நடைபெற உள்ளது. தூக்கு பாலத்தை நிறுவும் பணிகள் தொடங்க இன்னும் சில மாதம் ஆக வாய்ப்பு உள்ளது.
இடம் மாறுகிறது
பாம்பன் பாலத்தின் நுழைவுப் பகுதியான மண்டபம் கடற்கரை பூங்கா எதிரே உள்ள பகுதியில் தண்டவாளங்கள் அகற்றப்படுகின்றன. ஆரம்பத்தில் மீட்டர் கேஜ் ரெயில் ஓடியபோதும், அதன்பின்பு 2006-ல் அகலப்பாதையாக மாறிய பின்பும், இந்த பாதையில்தான் கடந்த 108 ஆண்டுகளுக்கும் மேலாக ரெயில் போக்குவரத்து நடந்து வந்தது. புதிய பாலத்துக்கான நுழைவுப்பகுதிக்காக இந்த 800 மீட்டர் தண்டவாளப்பகுதி, சற்று தூரத்துக்கு இடம் மாறுகிறது.
கடல் சீற்றம் மற்றும் கடல் அரிப்பால் புதிய தண்டவாள பாதை சேதமாகாமல் இருக்கும் வகையில் இருபுறமும் தடுப்பு கற்களும் கட்டப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.
ஆகஸ்டு மாதத்துக்குள்
புதிய ெரயில் பாலத்தின் பணிகளை முழுமையாக வருகின்ற ஆகஸ்டு மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மையப் பகுதியில் அமைய உள்ள புதிய தூக்குபாலம் ஒரே இணைப்பில் மேல் நோக்கி திறக்கும் வகையில் 70 மீட்டர் நீளத்தில் கட்டப்பட உள்ளது. அதுபோல் கப்பல்கள் கடந்து செல்லும்போது தற்போது உள்ள ரோடு பாலத்தின் உயரம் அளவிற்கு தூக்கு பாலம் திறக்கப்படும். இதன் மூலம் தற்போது செல்லும் கப்பல்களை விட மிக உயரமான மற்றும் அதிக எடை கொண்ட கப்பல்களும் இனி இந்த கடல் வழியாக செல்ல வாய்ப்புகள் இருக்கும். பழைய பாம்பன் ரெயில் பாலம் வழியாக இனி பயணிகள் ரெயில் போக்குவரத்து நடைபெறுவதற்கான வாய்ப்பு இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.