800 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; வேன் டிரைவர் கைது
தூத்துக்குடியில் 800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார் வேன் டிரைவரை கைது செய்தனர்.;
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் ரேஷன் அரசி கடத்தப்படுவதாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் கலா, சப்- இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் மற்றும் போலீசார் தூத்துக்குடி-மதுரை பைபாஸ் ரோட்டில் எப்போதும்வென்றான் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த மினிவேனை மறித்து சோதனை செய்தனர். அதில் ரேஷன் அரசி கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வேனில் 20 மூட்டைகளில் இருந்த 800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் ரேஷன் அரிசியை கடத்தியதாக, வேன் டிரைவர் மாப்பிள்ளையூரணி காமராஜர்நகரை சேர்ந்த சகாயஅற்புதம் மகன் சவரிமுத்துவை கைது செய்தனர். இதுதொடர்பாக குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.