கருப்புக்கொடி காட்ட முயன்ற 80 பேர் கைது

கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்ட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2023-08-24 19:00 GMT
கோவை


கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காட்ட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்பட 80 பேர் கைது செய்யப்பட்டனர்.


கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு


பாரதியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா உள்ாட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி நேற்று கோவை வந்தார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி காண்பிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகத்தினர் அறிவித்து இருந்தனர்.


கவர்னர் செல்லும் வழியான லாலி ரோடு சந்திப்பு பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதிதமிழர் விடுதலை பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் காலை 9.30 மணிக்கு திரண்டு இருந்தனர். அவர்கள் கவர்னருக்கு எதிராக கோஷமிட்டனர்.


55 பேர் கைது


இதற்கு கு.ராமகிருட்டிணன் தலைமை தாங்கி பேசும் போது, "நீட்தேர்வு, அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் நியமனம் உள்ளிட்ட பலவேறு மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் திருப்பி அனுப்புகிறார். தமிழக மக்களின் நலனில் அவருக்கு அக்கறை இல்லை. எனவே அவரை கண்டித்து இந்த போராட்டம் நடத்தப்படுகிறது என்றார்.


இதைத்தொடர்ந்து கு.ராமகிருட்டிணன் உள்ளிட்ட 55 பேர் கைது செய்யப்பட்டு அங்குள்ள ஒரு மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர்.


திராவிடர் விடுதலை கழகம்


இதேபோல் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில், லாலிரோடு உழவர் சந்தை அருகில் கருப்புக்கொடி போராட்டம் நடைபெற் றது. இதற்கு திருப்பூர் சு.துரைசாமி தலைமை தாங்கினார். இதில் கலந்து கொண்டவர்கள், கவர்னர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டு ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஒரு மண்டபத்துக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி விமானம் மூலம் காலை 9.25 மணிக்கு கோவை விமானநிலையம் வருவதாக இருந்தது. ஆனால் காலை 10.50 மணிக்குதான் கவர்னரின் விமானம் கோவை வந்தது. கவர்னர் வருவதற்கு முன்பே போராட்டத்தில் ஈடுபட்ட 80 பேர் கைது செய்யப்பட்டதால், கவர்னர் வரும்போது யாரும் கருப்புக்கொடி காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


கவர்னர் வருகை மற்றும் கருப்புக்கொடி போராட்ட அறிவிப்பு காரணமாக 800-க்கும் மேலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


மேலும் செய்திகள்